கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன்: திலக் வர்மா

முதல் இன்னிங்சில் சதமும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்து வெற்றிக்கு பங்கு வகித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன் என தெற்கு மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா துலீப் டிராபி போட்டியில் தென் மண்டல அணிக்கு கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

திலக் வர்மா

வடக்கு மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெற்கு மண்டலம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் திலக் வர்மா முதல் இன்னிங்சில் சதமும் (116 ரன்), 2-வது இன்னிங்சில் அரை சதமும் (51 ரன்) அடித்து வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

இந்நிலையில், வெள்ளைப் பந்து போட்டிகளில் (டி20, ஒருநாள் ஆட்டம்) விளையாடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை என திலக் வர்மா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக திலக் வர்மா கூறியதாவது:

எனக்கு எப்போதுமே சிவப்பு பந்து போட்டிகளில் விளையாடுவதுதான் பிடிக்கும். இந்திய அணிக்காக வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடுவேன் என ஒருபோதும் கனவிலும் நினைத்த தில்லை. இது கடவுளுடைய விருப்பமாகும். இந்திய அணிக்காக நான் இன்னும் டெஸ்டில் விளையாடவில்லை.

ஐ.பி.எல். போட்டி

என்னுடைய 10 வயதில் இருந்து கடுமையாக உழைத்து வருகிறேன். ஐ.பி.எல். மூலம் வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாட தேர்வானேன். ஆனால், அதற்கு முன்பாக நான் நிறைய சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடினேன். அதனால் என்னுடைய பலம்

டெஸ்ட் கிரிக்கெட்தான். டெஸ்டில் விளையாடுவதை நான் மிகவும் விரும்புகிறேன் என தெரிவித்தார்.

23 வயதான திலக் வர்மா 59 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். டெஸ்ட் அணியில் இடம் பெற்றதில்லை.