4-வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
லீக் சுற்றுகள் முடிந்து பிளே ஆப் சுற்றில் வெற்றிபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ், வாஷிங்டன் பிரீடம் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் பிரீடம் அணிகள் மோதிய இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் நைட்ரைடர்ஸ் அணி 19.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பிளட்சர் அதிகபட்சமாக 47 ரன்கள் சேர்த்தார். தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 40 ரன்னும், மேத்யூ டிரோம்ப் 39 ரன்னும் எடுத்தனர்.
வாஷிங்டன் பிரீடம் அணி சார்பில் பென் வார்ஷஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஓவன், நிகில் சவுத்ரி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வாஷிங்டன் பிரீடம் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
ஆண்ட்ரீஸ் கவுஸ் பொறுப்புடன் ஆடி 35 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 40 ரன்கள் எடுத்தார். நிகில் சவுத்ரி 25 ரன்கள் சேர்த்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஓபஸ் பியனார் 24 பந்தில் சிக்சர், 3 பவுண்டரியுடன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தில் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் எடுத்து லஹிரு மிலந்தா ரன் அவுட்டானார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பை வாஷிங்டன் பிரீடம் அணி ஒரு ரன்னில் இழந்தது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.