கிரிக்கெட்

லார்ட்ஸ் டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து - தொடரை கைப்ற்ற அசத்தல்

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், 194 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்:

கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. காக்ஸ் (55) மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமீ ஸ்மித் (61) அரை சதம் விளாசினர். பென் டக்கெட் (17), எமிலியோ (8), கேப்டன் ரூட் (4), ஹாரி புரூக் (15), லாரன்ஸ் (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒல்லி ராபின்சன் டக்-அவுட் ஆனார். ஆர்ச்சர் (14) ரன்களில் வெளியேறினார். ஜோஷ் டங் (1), அட்கின்சன் (34) ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து, 56 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகள், முகமது அலி 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர்.

தொடர்ந்து 2-வது நாளில் அட்கின்சன் (45) ஆட்டமிழந்ததும் போட்டி முடிவுக்கு வந்தது. ஜோஷ் டங் (30) ஆட்டமிழக்காமல் உள்ளார். 66.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து முன்னிலை:

இதனை அடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் அஜன் அவைஸ் (46), ஷகீல் (16) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால், 37.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 110 ரன்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து 180 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. இதில், பென் டக்கெட் (1), கேப்டன் ரூட் (24), காக்ஸ் (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆட்டத்தின் நான்காம் நாள் வரை 2-ஆவது இன்னிங்சில் பேட் செய்த இங்கிலாந்து அணி 2-ஆவது இன்னிங்ஸ் முடிவில் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், பாகிஸ்தான் வெற்றி பெற 389 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது.

இங்கிலாந்து வெற்றி:

கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு சுமாரான தொடக்கமே கிடைத்தது. அந்த அணியில் துவக்க வீரர்களில் ஷான மசூத் (26 ரன்கள்) எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர்.

பாகிஸ்தான் தரப்பில் சவுத் ஷகீல் மட்டும் பொறுப்புடன் ஆடி 97 ரன்களை எடுத்தார். எனினும், மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் பாகிஸ்தான் அணி 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இங்கிலாந்து அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. இதுதவிர மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றி உள்ளது.