வங்கதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ். பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விக்கெட் கீப்பர் பணியை பெரும்பாலும் மேற்கொள்வதில்லை. வங்கதேச அணியின் நட்சத்திர வீரராகவும், சீனியர் வீரராகவும் உருவெடுத்துள்ளார். இதனால் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வங்கதேச அணியின் ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் இருந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு தற்போது லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2027 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை கேப்டனாக இருப்பார் என வங்கதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
2027 உலக கோப்பை அடுத்த வருடம் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடக்கிறது. அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி நவம்பர் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன.
31 வயதாகும் லிட்டன் தாஸ் 2015-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். வங்கதேச அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 20 அரைசதங்களுடன் 3356 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 36.47 ஆகும்.
104 ஒருநாள் போட்டிகளில் 5 சதம், 14 அரைசதங்களுடன் 2869 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 30.84 ஆகும். 122 டி20 போட்டிகளில் விளையாடி 16 அரைசதங்களுடன் 2702 ரன்கள் அடித்துள்ளார்.