ஜூனியர் ஆசிய கோப்பையின் கடைசியில் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெறவைத்தது கனவு போன்று அற்புதமாக இருந்தது என மோஹித் உல்வா தெரிவித்தார்.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமனில் நடந்தது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.
அதன்பின், 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
ஒரு கட்டத்தில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்திருந்தது.
என்றாலும் கடைசி பந்தில் மோஹித் உல்வா பவுண்டரி அடித்து, இந்தியாவை திரில் வெற்றி பெறவைத்தார். ஆட்ட நாயகன் விருது மோஹித் உல்வாவுக்கு அளிக்கப்பட்டது.
இதன்மூலம் இந்திய அணிக்கும், மோஹித் உல்வாவுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், மோஹித் உல்வா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அது ஒரு கனவு போல, மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. அந்தத் தருணத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
கடைசி ஓவரில், நான் அந்த ஒரு பந்திற்காகக் காத்திருந்தேன். ஒரு பவுண்டரி அடித்தால் 8 ரன்களை எளிதாக எட்டிவிட முடியும் என்பது எனக்குத் தெரியும்.
அந்த ஒரு பந்திற்காகக் காத்திருந்து, பவுண்டரி அடித்து, வெற்றியை உறுதிசெய்து, இந்தியாவுக்காக அந்தப் பட்டத்தை வெல்ல வேண்டும் என விரும்பினேன்.
நான் எதிர்பார்த்த அந்தப் பந்து சரியாகக் கடைசி நேரத்தில் வந்தது. உண்மையில் பந்தை அடிப்பதற்கான வேகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தேன்.
அதனால் கிரீசை விட்டு சற்று வெளியே வந்தேன். ஆனால் அவர் ஒரு ஷார்ட் பால் வீசினார். அந்தப் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் அடிப்பதற்கு எனக்குப் போதுமான நேரம் இருந்தது என தெரிவித்தார்.