இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 250 ரன் இலக்கை எடுப்பதற்கு கேப்டன் ஷாய் ஹோப், ரூதர்போர்ட் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் 45 பந்தில் 102 ரன் (6 பவுண்டரி, 9 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 32 வயதான இவர் 20 ஓவர் போட்டியில் 2-வது முறையாக சதம் அடித்தார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செஞ்சரி அடித்து இருந்தார்.
லக்னோவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 52 ரன் எடுத்தார். 2 போட்டிகளிலும் சேர்த்து 154 ரன் எடுத்து நல்ல நிலையில் உள்ளார். அவரது ஸ்டிரைக்ரேட் 187 ஆகும்.
இந்த நிலையில் ஷாய் ஹோப் ஐ.பி.எல். மினி ஏலத்தில் பெயரை பதிவு செய்தால் அவருக்கு கடும் போட்டி இருக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். மினி ஏலத்தில் ஷாய் ஹோப் தனது பெயரை பதிவு செய்தால் சில மேஜைகளில் இருந்து அவரை ஏலம் எடுப்பதற்காக கைகள் உயரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷாய் ஹோப் 2024 ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடினார். 9 ஆட்டத்தில் 183 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக்ரேட் 150 ஆகும்.
கடந்த 2017-ல் இருந்து 2023-ம் ஆண்டு இடைவெளியில் 26 சர்வதேச 20 போட்டிகளில் விளையாடி ஷாய் ஹோப் 493 ரன்கள் எடுத்தார். 2024-ம் ஆண்டுக்கு பிறகு அவரது ஆட்டம் மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது. 46 போட்டி களில் 1404 ரன்கள் குவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துள்ள 5-வது வீரர் ஷாய் ஹோப் ஆவார். 72 போட்டிகளில் 1,897 ரன்கள் எடுத்துள்ளார். ரோமன் போவெல் (2,371 ரன்), நிக்கோலஸ் பூரான் (2,275), பிரண்டன் கிங் (2,028), கிறிஸ் கெய்ல் (1,899) ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.
இன்றைய போட்டியில் கெய்லை முந்தி ஷாய் ஹோப் 4-வது இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த 20 ஓவரில் அவர் 6,246 ரன்கள் (232 ) எடுத்துள்ளார்.