சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23,000 ரன்களைக் கடந்த இங்கிலாந்தின் ஜோ ரூட் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டி ரிவர்சைடு மைதானத்தில் நடந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் எடுத்தார்.
ஜோ ரூட் 52 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். ஜாஸ் பட்லர் 33 பந்தில் 31 ரன் எடுத்தார். வில் ஜேக்ஸ் 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, சசிந்து கொலம்பேஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்
இதையடுத்து, 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விக்கெட்களை இழந்தது.
துனித் வெல்லலகே 45 ரன்னும், குசால் மெண்டிஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் இலங்கை அணி 37 ஓவரில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 89 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சார்பில் வில் ஜாக்ஸ் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 44 ரன் எடுத்ததன் மூலம் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 23,000 ரன்களைக் கடந்தார்.
இதன்மூலம் அதிவேகமாக 23,000 சர்வதேச ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடம் பிடித்தார்.
அதிவேகமாக 23 ஆயிரம் ரன்களை எட்டியவர்களின் பட்டியல்
விராட் கோலி: 490 இன்னிங்ஸ்
ஜோ ரூட்: 521 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர்: 522 இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங்: 544 இன்னிங்ஸ்