சாய் சுதர்சன்- தேவ்தத் படிக்கல்
கிரிக்கெட்

ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் மீண்டும் சறுக்கல்: கைக்கொடுத்த படிக்கல், சாய் சுதர்சன்

நியூசிலாந்து ஏ அணிக்கெதிராக 2-வது இன்னிங்சில் தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்துள்ளார்.

இந்தியா ஏ- நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையில் மூன்று அதிகாரப்பூர்வ மற்ற போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று நியூசிலாந்தில் உள்ள லிங்கனில் (Lincoln) தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் கிரீன் பிட்ச் தயார் செய்யப்பட்டிருந்தது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.

113 ரன்களில் சுருண்ட இந்தியா ஏ

தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (17), கே.எல். ராகுல் (0), சாய் சுதர்சன் (0), துருவ் ஜூரல் (1), வாஷிங்டன் சுந்தர் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தேவ்தத் படிக்கல் (32), யாஷ் ரதோட் (44 நாட்அவுட்) ஆகியோர் தாக்குப்பிடித்து விளையாட இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 113 ரன்களில் சுருண்டது. பின்னர் நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.

நியூசிலாந்து ஏ 317 ரன்கள் குவிப்பு

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து ஏ 317 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ், அகிப் நபி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நியூசிலாந்து ஏ அணி சார்பில் கேப்டன் மரியு 76 ரன்கள் விளாசினார். டீன் பாக்ஸ்கிராஃப்ட் 51 ரன்கள் சேர்த்தார்.

ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஏமாற்றம்

பின்னர் 204 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா ஏ 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாநது ஏ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து விளையாடியது. தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன் அபாரம்

2-வது நாள் முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் 56 ரன்களுடனும், சாய் சுதர்சன் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது இந்தியா ஏ 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

நாளை தாக்குப்பிடித்து விளையாடினால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து நியூசிலாந்து ஏ அணிக்கு டார்கெட் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இந்த டெஸ்ட் 4 நாட்களை கொண்டதாகும்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு இந்த டெஸ்ட் தொடர் சிறந்த பயிற்சியாக அமையும்.

SCROLL FOR NEXT