கிரிக்கெட்

மது பழக்கத்தை விட்டு விட்டேன்- காரணம் கூறிய யுஸ்வேந்திர சாஹல்

நான் மது அருந்தும் பழக்கத்தை விட்டு 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது என ஐ.பி.எல். போட்டிக்காக முழுவீச்சில் தயாராகி வரும் யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

2023-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிகரமான பவுலராக விளங்கி வருகிறார். அவர் ஐ.பி.எல். போட்டி தொடரில் 221 விக்கெட்டுகள் (174 ஆட்டம்) வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்காக ஆடியிருக்கும் அவர் கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறினார். அந்த அணிக்காக கடந்த சீசனில் 14 ஆட்டங்களில் ஆடி 16 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடந்த ஆண்டு பஞ்சாப் அணி இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

ஐ.பி.எல். போட்டிக்காக முழுவீச்சில் தயாராகி வரும் யுஸ்வேந்திர சாஹல், டிவில்லியர்சின் யுடியுப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ''கடந்த ஆண்டு என்னுடைய ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு எனக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. கைவிரல் பகுதியிலும் காயம் ஏற்பட்டது. எனவே அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியில் என்னால் சரியான முறையில் 'லெக் ஸ்பின்' பந்து வீச முடியவில்லை. இந்த ஆண்டு நான் முதலில் எனது உடலை கவனித்து கொள்ள விரும்புகிறேன்.

வரும் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பஞ்சாப் கிங்ஸ் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். நான் மது அருந்தும் பழக்கத்தை விட்டு 6 மாதங்களுக்கு மேலாகி விட்டது. தற்போது எனக்கு வயது 35 ஆகிறது. எனவே நான் இன்னும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அணிக்கு 150 சதவீத பங்களிப்பை அளிக்க நினைக்கிறேன். ஒரு மூத்த வீரராக ஐ.பி.எல்.-ல் உள்ளவர்கள் என்னிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார்.