ஐ.பி.எல்.

சேட்டை புடிச்ச பையன் சார்... ஷெப்பர்ட் போல பேட்டிங் செய்த கோலி- வைரல் வீடியோ

ஆர்சிபி அணியின் வலைப்பயிற்சியின் போது சக வீரர் ரொமாரியோ ஷெப்பர்டின் பேட்டிங் ஸ்டைலை விராட் கோலி வேடிக்கையாக செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி அணி தொடக்க போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அசத்தியது. இதனை தொடர்ந்து தனது 2-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வருகிற நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, வலைப்பயிற்சியின் போது தனது சக வீரர் ரொமாரியோ ஷெப்பர்டின் பேட்டிங் ஸ்டைலை வேடிக்கையாகப் பின்பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரொமாரியோ ஷெப்பர்டின் பேட்டிங் ஸ்டைல் மற்றும் அவர் பந்தை அடிக்கும் விதத்தை கோலி அப்படியே செய்து காட்டினார்.

வழக்கமாக மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் கோலியின் இந்த குறும்புத்தனமான செயல், அங்கிருந்த மற்ற வீரர்களையும் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்து சிரிக்க வைத்தது.

ஏற்கனவே பும்ரா, கங்குலி என போன்ற பல கிரிக்கெட் நட்சத்திரங்களின் ஸ்டைலை கோலி முன்பு பின்பற்றி காட்டியுள்ளார். அந்தப் பட்டியலில் தற்போது ரொமாரியோ ஷெப்பர்டும் இணைந்துள்ளார்.

விராட் கோலி தற்போது சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல் தொடரில் தனது முழுமையான ஈடுபாட்டையும், அதே சமயம் இதுபோன்ற கலகலப்பான தருணங்களையும் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.