ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது இதயப் பகுதியாக விளங்குவது பரமக்குடி. பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,54,381 ஆகும், இதில் 1,26,068 ஆண் வாக்காளர்கள், 1,28,298 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 15 ஆகும்.
இந்த தொகுதியில் 11 முறை நடந்த தேர்தலில் 7 முறை அ.தி.மு.க., தி.மு.க. 2 முறை இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒருமுறை வென்றுள்ளது.
பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள், நயினார்கோவில் ஊராட்சியில் 37 பஞ்சாயத்துக்கள், போகலூர் ஊராட்சியில் 26 பஞ்சாயத்துக்கள், பரமக்குடி ஊராட்சியில் 39 பஞ்சாயத்துக்கள், அபிராமம் பேருராட்சியில் 15 வார்டுகள், கமுதி தாலுகாவில்13 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.
தொகுதியில் முக்குலத்தோர், ஆதிதிராவிடர், யாதவர், சவுராஷ்டிரா, செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர். நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாக்குகளே வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பவைகளாக தொடர்ந்து இருந்து வருகிறது.
பரமக்குடியில் முக்கிய தொழில் என்றால் நெசவு தொழில்தான். இந்த தொழிலில் பலர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு சரியான வசதிகள் இல்லை. எனவே நெசவாளர்களுக்கு முக்கிய பிரச்சினையான அல்லுக்கூடம் விரிவுபடுத்தி குடிசை மற்றும் வேலி அமைத்து தரவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் பரமக்குடி நகர் பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
தற்போது நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு பஸ்கள் புறவழிச்சாலையில் செல்லப்படுவதால் புறவழிச் சாலையில் பஸ் நிறுத்தம் அமைத்துத் தரவேண்டும். அதனால் நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என மக்கள் கூறுகின்றனர்.
பரமக்குடி தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இதுவரை ஆட்சியாளர்கள் தேர்தலில் பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதலில் கூறுகின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் இன்றளவும் அமல்படுத்தவில்லை. பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்தால்தான் நகரில் மழைநீர் தேங்காமல் வழிந்தோடும்.
மேலும் தற்போது சாக்கடையால் சுகாதார சீர்கேடு உருவாகிறது. அதனைப் போக்குவதற்கு பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தினால் தான் நீங்கும் என்பது பொது மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். கமுதக்குடி மற்றும் அச்சம் குளத்தில் உள்ள கூட்டுறவு நூற்பாலைகள் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.
தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை:-
1. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் வகையில் பரமக்குடி சட்ட மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும். பரமக்குடியில் இயங்கும் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
2. வைகை ஆற்றில் உள்ள நாணல்கள், கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பரமக்குடி மையப் பகுதியில் வைகை ஆற்றில் சாக்கடை நீர் செல்வதைத் தடுக்க வேண்டும்.
3. கடந்த 25 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பரமக்குடி தலைமை தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும்.
4. பரமக்குடி பகுதியில் விளை விக்கக்கூடிய நெல், மிளகாய், பருத்தி உரிய கொள்முதல் விலை பெற்றுத் தரவேண்டும்.
5. அந்தந்த ஒன்றியங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும்.
6. கிராமங்களுக்கு புதிய இணைப்பு சாலைகள் கொண்டு வரவேண்டும்.
7. நயினார்கோவில், போகலூர் ஒன்றியங்களை இணைத்து தனி தாலுகாவாக உருவாக்க வேண்டும்.
10. மக்களின் குறைகளை தீர்க்க ஒன்றியம், நகரம், பேரூராட்சி வாரியாக மக்கள் - அதிகாரிகள் சந்திப்பு கூட்டம் மாதந்தோறும் நடத்த வேண்டும்.
11. பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம், போகலூர் கூட்டு குடிநீர் திட்டம், நயினார்கோவில் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற புதிய திட்டங்களை உருவாக்கி தர வேண்டும்.
2019 இடைத்தேர்தல்
சதன்பிரபாகர் (அதி.மு.க. வெற்றி) - 82348
சம்பத்குமார் (தி.மு.க.) - 68406
எஸ்.முத்தையா (அ.ம.மு.க.)- 9672
சங்கர் (மக்கள் நீதி மய்யம்)- 5421
ஹேமலதா (நாம் தமிழர்)- 6710
2016 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற டாக்டர் முத்தையா கட்சி மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அங்கு 2019-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டாக்டர் முத்தையா அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டார்.
தேர்தல் வெற்றி
1971- சிறைமீட்டன் (தி.மு.க.)
1977- உக்கிரபாண்டியன் (அ.தி.மு.க.)
1980- தவசி (அ.தி.மு.க.)
1984- பாலுச்சாமி (அ.தி.மு.க.)
1989- எஸ்.சுந்தரராஜ் (அ.தி.மு.க.)
1991- பி.என்.சுந்தரராஜ் (அ.தி.மு.க.)
1996 திசைவீரன் (தி.மு-.க.)
2001 ராம்பிரபு (தா.மா.க.)
2006 ராம்பிரபு (காங்கிரஸ்)
2011 எஸ்.சுந்தரராஜ் (அ.தி.மு.க.)
2016 டாக்டர் முத்தையா (அ.தி.மு.க.)
2019 சதன்பிரபாகர் (இடைத்தேர்தல்) (அ.தி.மு.க.)