ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தொகுதி பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமானதாகும். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல வீரர்கள் இப்பகுதியை சார்ந்தவர்கள்தான். இன்றும் தாய்நாட்டிற்காக ராணுவத்தில் பணியாற்றுபவர்களாகவும் உள்ளனர்.
விவசாயமும், மீன் பிடித்தொழிலும் இங்கு பிரதானமாக உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 1,42,432, பெண் வாக்காளர்கள் 1,41,963, மூன்றாம் பாலினத்தவர்கள் 22 என மொத்தம் 2,84,417 வாக்காளர்கள் உள்ளனர்.
1952 முதல் 2016 வரை இங்கு நடைபெற்ற 15 தேர்தல்களில் காங்கிரஸ் 5, தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., சுதந்திரா கட்சி மற்றும் சுயேட்சைகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன.
2016 தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திரைப்பட நடிகருமான கருணாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திருவாடானை தொகுதியில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் யூனியன்களும், ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி யூனியன்களுக்குட்பட்ட சில பகுதிகளும் வருகின்றன. திருவாடானை யூனியனுக்குட்பட்ட 47 கிராம பஞ்சாயத்துக்கள், ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்குட்பட்ட 36 கிராம பஞ்சாயத்துக்கள் தொகுதிக்குள் வருகின்றன. இதேபோல் தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பேருராட்சிகளும் இந்த தொகுதிக்குட்பட்டதுதான். இங்கு மீனவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
தொகுதியில் உள்ள 21 மீனவ கிராமங்களில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். எஸ்.பி.பட்டிணம், பாசிப்பட்டிணம், தொண்டி, நம்புதாளை, புதுப்பட்டிணம், திருப்பாலைக்குடி போன்ற பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி நாட்டுப்படகு மீனவர்களும், லாஞ்சியடி, சோழியக்குடி, மோர்ப் பண்ணை ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடி தொழிலும் செய்து வருகின்றனர்.
கோரிக்கைகள்
புயல் காலங்களில் தங்களது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகிறது என கோட்டக்கரை ஆறு, விருசுழி ஆறு, மணிமுத்து ஆறு போன்ற ஆறுகள் கடலில் கலக்கிறது. இம்முகத்துவாரத்தில் மணல் திட்டுக்களை ஆழப்படுத்தி தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் எனவும் கடல் சீற்றத்தின்போது கடல் அலைகள் ஊருக்குள் புகாதாவாறு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என இவை மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
திருவாடானை தொகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. 4 ஆயிரம் ஏக்கருக்கு பாசன வசதி கொடுக்கும் அளவுக்கு ராஜசிங்க மங்களம் கண்மாய் இருந்தும் பயனற்று இருந்தது. தேவகோட்டை மணிமுத்தாற்றிலிருந்து மழை காலங்களில் உபரி நீர் வந்தால்தான் கண்மாய்க்கு நீர் வரத்து கிடைக்கும்.
இதே போல வைகையாற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் இப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு நீர்வரத்து கிடைக்கும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 94 பெரிய கண்மாய்கள் மூலம் மணிமுத்தாற்றின் வழித்தடத்தில் உள்ள சில கண்மாய்களுக்கு குண்டாறு உபரி நீர் செல்லும் வகையில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும், சமீபத்தில் பெய்த பெரு மழையால் தொண்டி மணிமுத்தாறு வழியாக உபரி நீர் கடலுக்கு வீணாக சென்றது.
இனியும் அவ்வாறு மழை நீர் கடலுக்கு வீணாக செல்லாமல் தடுப்பணை கட்டவும், இத்தொகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள பொதுமக்கள் ஆக்கிரமிப்பு, காட்டுக்கருவேல செடி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி முக்கியமாக அனைத்து நீர் நிலைகளையும் முறையாக ஆழப்படுத்தி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதே போல ஆர்.எஸ். மங்களம் பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்று உபரி நீரை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பர்ர்க்கின்றனர்.
குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக ரூ.616 கோடி செலவில் காவிரி கூட்டு குடி நீர் திட்டம் கொண்டு வரப்பட்டாலும் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைப்பதில்லை என பலரும் குறைகூறி வருகின்றனர்.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாக திருவாடானை ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரர் கோவில், வாலி வழிபட்ட தலமாக 13-ம் நூற்றாண்டைச்சேர்ந்த நம்புதாளையில் உள்ள ஸ்ரீநம்புஈஸ்வரர் சமேத அன்னபூரணேஸ்வரி கோவில், திருவெற்றியூர் பாகம்பிரியால் கோவில், காரங்காடு புனித செங்கோல்மாதா திருத்தலம், காரங்காடு மாங்குரோவ் காடுகளுக்கிடையே படகு சவாரி சூழல் சுற்றுலா, ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம், பாசிப்பட்டிணம் தர்ஹா ஆகிய பகுதிகளை இணைத்தும் நீண்ட கடற்கரையைக்கொண்ட தொண்டி கடற்கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடற்கரையை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல காலமாக உள்ளது.
1952- செல்லத்துரை (சுயேட்சை)
1957- கரியமாணிக்கம் அம்பலம் (சுயேட்சை)
1962- கரியமாணிக்கம் அம்பலம் (சுதந்திராகட்சி)
1967- கரியமாணிக்கம் அம்பலம் (சுதந்திராகட்சி)
1971- சண்முகம் (தி.மு.க.)
1977- கரியமாணிக்கம் அம்பலம் (காங்கிரஸ்)
1980- அங்குசாமி (அ.தி.மு.க.)
1984- சொர்ணலிங்கம் (காங்கிரஸ்)
1989- கே.ஆர்.ராமசாமி காங்கிரஸ்)
1991- கே.ஆர். ராமசாமி (காங்கிரஸ்)
1996- கே.ஆர்.ராமசாமி (தமிழ் மாநில காங்கிரஸ்)
2001- கே.ஆர்.ராமசாமி (தமிழ் மாநில காங்கிரஸ்)
2006- கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்)
2011- சுப.தங்கவேலன் (தி.மு.க.)
2016- கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை (அ.தி.மு.க.)