திருப்பரங்குன்றம் தொகுதியில் விளாச்சேரி, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக் குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, தனக்கன்குளம், சிந்தாமணி, ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனையூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருங்குடி, முல்லாகுளம், நிலையூர், பெரிய ஆலங்குளம், வலையப்பட்டி, வலையங்குளம், பாப்பானோடை, குதிரை குத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பத்தி, நெடுமதுரை, கொடும்பாடி, ஓ. ஆலங்குளம், பாரைபத்தி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இவற்றில் சின்ன அனுப்பானடி, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி திருநகர் ஆகியவை நகர் பகுதிகளாகும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 3,04,746 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 155,011 பேர் பெண்கள். 1,49,639 பேர் ஆண்கள். 96 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் முக்குலத்தோர் அதிகம் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சவுராஷ்டிரா, முத்தரையர், ஆதி திராவிடர் மற்றும் பல்வேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் முக்குலத்தோர் 30 சதவீதம் பேரும் சௌராஷ்டிரா, முத்தரையர் தலா 15 சதவீதம் பேரும் உள்ளனர். இவர்கள்தான் அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.
இந்திய விடுதலைக்கு பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் முறையாக கடந்த 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.எம்.சீனிவேல், ஏ.கே. போஸ் ஆகியோர் மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு 2 தடவைகள் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதுவரை அங்கு 16 தடவைகள் சட்டசபை தேர்தல் நடந்துள்ளன.
இதில் அ.தி.மு.க. 8 முறையும், தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தே.மு.தி.க. ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பணப் பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. விவசாயத்துக்கான தண்ணீரை பெறுவதில் விவசாயிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.
அதுவும் தவிர மல்லிகை பூக்களை ஏற்றுமதி செய்வதற்கான வாரியம் எதுவும் தொகுதியில் இல்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் மல்லிகைப்பூ சென்ட் தொழிற்சாலை அமைப்பது அனைத்து கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது. ஆனாலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து கிடப்பில் இருந்து வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் கைத்தறி நெசவு தொழிலும் முக்கியமான தாகும். நிலையூர், கைத்தறி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பை இந்த தொழில் பெற்றுத் தந்துள்ளது. ஆனாலும் கைத்தறி நெசவுக்கான மூலப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதில்லை.
எனவே நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு சொசைட்டி அமைக்க வேண்டும் என்பது அங்கு வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. திருப்பரங்குன்றம் ஆன்மிக சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது ஆனாலும் இங்கு பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. எனவே இங்கு வசிக்கும் படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு கேள்விக் குறியாக உள்ளது.
இது தவிர விரிவாக்க பகுதிகளில் குடிதண்ணீர் பற்றாக்குறை, சாலை வசதி யின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
2019 இடைத்தேர்தல்
டாக்டர் சரவணன் (தி.மு.க. வெற்றி)- 85434
முனியாண்டி (அ.தி.மு.க.)- 83038
மகேந்திரன் (அ.ம.மு.க.)- 31199
சக்திவேல் (மக்கள் நீதி மய்யம்)- 12610
ரேவதி (நாம் தமிழர்)- 5467
தேர்தல் வெற்றி
1957- சின்னக்கருப்பத்தேவர் (காங்கிரஸ்)
1962- சின்னக்கருப்பத்தேவர் (காங்கிரஸ்)
1967- அக்னிராஜ் (தி.மு-.க.)
1971- காவேரிமணியம் (தி.மு.க.)
1977- காளிமுத்து (அ.தி.மு.க.)
1980- காளிமுத்து (அ.தி.மு.க.)
1984- மாரிமுத்து (காங்கிரஸ்)
1989- ராமச்சந்திரன் (தி.மு.க.)
1991- ஆண்டித்தேவர் (அ.தி.மு-க.)
1996- ராமச்சந்திரன் (தி.மு.க.)
2001- சீனிவேல் (அ.தி.மு-.க.)
2006- போஸ் (அ.தி.மு.க.)
2011- ராஜா (தே.மு.தி.க.)
2016- போஸ் (அ.தி.மு.க.)
2019- டாக்டர் சரவணன் (தி.மு.க.) (இடைத்தேர்தல்)