சஸ்பெண்டு 
ஐ.பி.எல்.

தேர்தல் பணியில் அலட்சியம்- அதிகாரி, 2 போலீசார் சஸ்பெண்டு

கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியமாக நடந்து கொண்டதாக அதிகாரி மற்றும் 2 போலீசாரை கலெக்டர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதிக்குபட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அட்டகட்டி பகுதியில் சந்தேகப்படும்படியான வாகனம் வருவதாகவும், அந்த இடத்தில் வாகன சோதனை செய்யும்படியும் தேர்தல் பார்வையாளர் ராம்கிருஷ்ணா கேடியார் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் வாகன சோதனைக்கு உடனே செல்லாமல் 2 மணிநேரம் தாமதப்படுத்தினர். மேலும் தேர்தல் செலவினம் குறித்த அறிக்கையை சரிபார்க்காமல் அலட்சியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து தேர்தல் பார்வையாளர் கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இது குறித்து கலெக்டர் நாகராஜன் விரிவான விசாரணை நடத்தினார்.

விசாரணையில் நிலையான கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த பணிப்பார்வையாளர் வெள்ளிங்கிரி மற்றும் வால்பாறை போலீஸ்காரர்கள் பிரசாத், குமாரவேல் ஆகியோர் தேர்தல் பணியில் அலட்சியமாகவும் தேர்தல் செலவினம் குறித்த அறிக்கையை சரிபார்க்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் கலெக்டர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

தேர்தலில் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் இதற்கு முன்பு இருந்த கலெக்டர் ராஜாமணி மற்றும் போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் ஆகியோர் அதிரடியாக தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இடமாற்றம் செய்யப்பட்ட கலெக்டர் ராஜமணிக்கு பதிலாக கலெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டார். கலெக்டராக பொறுப்பேற்ற 3-வது நாளில் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.