முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 
ஐ.பி.எல்.(IPL)

நெல்லை-குமரியில் முதலமைச்சர் நாளை சூறாவளி சுற்றுப்பயணம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் இன்று பிரசாரத்தை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி இரவு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

மாலை மலர்

நெல்லை:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் அரசியில் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டங்கள் தோறும் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரத்தை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி இரவு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

அவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு ஆதரவு கோரி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடையே பிரசாரம் செய்ய உள்ளார். அவரது வருகையையொட்டி கயத்தாறு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கயத்தாறில் இரவு பிரசாரத்தை முடிக்கும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து குமரி மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு ஓய்வு எடுத்துவிட்டு காலையில் குமரியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

பின்னர் அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு 11 மணி அளவில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணகுடி பஸ் நிலையத்தில் திறந்த வேனில் நின்றபடி இன்பதுரை எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்கிறார்.

தொடர்ந்து அங்கிருந்து 12 மணிக்கு நாங்குநேரி செல்லும் அவர் அங்குள்ள அம்மன்கோவில் திடலில் வேட்பாளர் தச்சை கணேசராஜாவிற்கு ஆதரவாக வேனில் நின்றபடி வாக்கு சேகரிக்கிறார்.

முதலமைச்சரின் வருகையால் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் அவரது வருகை மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவரது வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.