சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்துவிட்ட நிலையில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இனி 2-ம் கட்டமாக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட தலா 3 பேரின் பெயர்களை வேட்பாளர்களாக பரிந்துரை செய்தனர். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
இதையடுத்து மீண்டும் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் 15 அம்சங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
வேட்பாளரின் குற்ற பின்னணியின்மை, ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்தால் அவர்களுக்கான மக்கள் செல்வாக்கு உள்ளிட்ட 15 அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இந்த அனைத்து அம்சங்களையும் பூர்த்திசெய்யும் நபர்களையே அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. வேட்பாளர்கள் தேர்வுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்தநிலையில் 12 அல்லது 13-ந்தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.