இந்த தொகுதியில் முக்கிய தொழிலாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக விசைத்தறி தொழில் உள்ளது. இதுதவிர கைத்தறி தொழில்களும், தனியார் காற்றாலை மின் உற்பத்தி, தென்னை நார் தொழிற்சாலை, தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் உற்பத்தி, பஞ்சு நூற்பாலை மற்றும் அனைத்து விதமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன.
சூலூர் சுல்தான்பேட்டை, சோமனூர், பதுவம்பள்ளி போன்ற பல்வேறு இடங்களில் விவசாய பணியும் நடந்து வருகிறது.
இந்த தொகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சூலூர் பெரிய குளம் அமைந்துள்ளது. இதில் படகுத்துறை மற்றும் சிறுவர் பூங்கா அமைத்துள்ளனர். இந்த குளத்தை பார்ப்பதற்காவும், இதில் படகு சவாரி செய்யவும் ஏராளமானோர் வருகின்றனர். இதுதவிர 70 ஏக்கர் பரப்பில் சூலூர் சின்ன குளமும், 400 ஏக்கர் பரப்பளில் அச்சங்குளமும் உள்ளன. இந்த குளங்களில் உள்ள நீராதாரங்கள் மூலம்தான் விவசாயம் நடந்து வருகிறது.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட 800 ஆண்டு பழமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் திருவேங்கட நாதர் பெருமாள் கோவில், குமரன் கோட்டம் மற்றும் சுல்தான்பேட்டை செஞ்சேரி மலை பகுதியில் மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்களும் இந்த தொகுதியில் உள்ளன. மேலும் 300 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த தமிழ்நாட்டின் ஏழாவது திருத்தலமாக விளங்கும் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாத அன்னை ஆலயம் இங்குதான் உள்ளது. இதுதவிர இஸ்லாமிய வழிபாட்டு தலங்களும் உள்ளன.
இந்த தொகுதியில் ஏழு பேரூராட்சிகளும், அப்பநாயக்கன்பட்டி, போகம்பட்டி, இடையர் பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம், ஜல்லிப்பட்டி, கள்ளப்பாளையம், கம்மாளப்பட்டி உள்பட சின்ன சின்ன கிராமங்களும் உள்ளன.
இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,15,325. இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 197 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 102 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 26 பேரும் உள்ளனர்.
வெள்ளாள கவுண்டர்கள், நாயக்கர், தேவாங்க செட்டியார், முதலியார், அருந்ததியினர் மற்றும் பல்வேறு சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர் களும் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த 2009-ம் ஆண்டுதான் சூலூர் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் இங்கு தேர்தல் நடந்து வருகிறது. இதில் 2 முறையும் அ.தி.மு.கவே வெற்றி பெற்றுள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.கவை சேர்ந்த தினகரனும், 2016-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனகராஜூம் வெற்றி பெற்றனர். கடந்த 2019-ம் ஆண்டு கனகராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து இடைத் தேர்தலை சந்தித்தது. அதிலும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கந்தசாமி வெற்றி பெற்றார். 3 முறை தேர்தல் நடந்து அதில் 3 முறையும் அ.தி.மு.கவே இங்கு வெற்றி பெற்றுள்ளது.
கோரிக்கை
சோமனூர், கருமத்தம்பட்டி, பதுவம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. இத்தொழிலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் மற்றும் ஊடை நூல் ஆகியவற்றை விசைத்தறி உரிமையாளர்களுக்கு அளித்து துணியாக நெய்து கொடுக்க செய்வார்கள். இதற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி தருகின்றனர். இந்த கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் கடந்த பல ஆண்டுகளாகவே கூறி வருகின்றனர். ஆனால் இன்று வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட பாடில்லை.
இதனை நிறைவேற்றி தர வேண்டும் என்பதும், இங்கு ஒரு ஜவுளி பூங்காவை அமைத்து தர வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுபோக அரசு கலைக்கல்லூரி, தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு மகளிருக்கான தனி காவல் நிலையம் என்பது சூலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் எங்கும் இல்லை. இதனால் போத்தனூர் மற்றும் துடியலூர் பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. எனவே இந்த தொகுதியில் மகளிர் காவல் நிலையம் அமைத்து தந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
மேலும் கருமத்தம்பட்டி கணியூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர்.
இதற்கு அரசு தலையிட்டு இதற்கு உண்டான தீர்வு கண்டு சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் மக்களுக்கான கட்டணத்தை விலக்கு அளிக்க முன்வர வேண்டும் என்பதும் இப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.