நடப்பு ஐ.பி.எல்.தொடர் கடந்த மார்ச் 28-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 10-வது இடங்களைப் பிடித்து வெளியேறின.
நேற்று நடந்த குவாலிபையர் 1 ஆட்டத்தில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது.
புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணியுடன், 4வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.
நடப்பு தொடரில் 14 போட்டிகளில் ஆடியுள்ள ஐதராபாத் அணி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்றுள்ளது. இதேபோல் 14 போட்டிகளில் ஆடியுள்ள ராஜஸ்தான் அணி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது.
ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதியதில் ஒரு போட்டியில் 57 ரன் வித்தியாசத்திலும், மற்றொரு போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசை பலம் நிறைந்ததாக காணப்படுகிறது.
அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் விக்கெட் கீப்பர் கிளாசன் 606 ரன்களுடன் 3வது இடத்திலும், இஷான் கிஷன் 569 ரன்களுடன் 6வது இடத்திலும், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 563 ரன்களுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி குவாலிபையர் 2 சுற்றுக்குள் நுழைந்து குஜராத் அணியுடன் மோதும்.
குவாலிபையர் 2 சுற்றில் வெற்றிபெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதனால் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.