மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய மும்பை 195 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 18-வது ஓவரில் மார்கோ யான்செனின் பந்தில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர் அடிக்க முயன்றார். பந்து லாங் ஆன் திசைக்கு சென்றது. அங்கு நின்றிருந்த ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வரும் திசையை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடி, எல்லைக்கோடு அருகே குதித்து பந்தைப் பிடித்தார். அதை உடனே அருகிலிருந்த பார்ட்லெட்டிடம் தட்டிவிட்டு கேட்ச்சை நிறைவு செய்தார். இதனால் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார்.
இந்தக் காட்சியைப் பார்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா அதிர்ச்சியடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
ஷ்ரேயாஸ் அய்யரின் இந்த கேட்ச் வெறும் உடல் திறமைக்கு அப்பால், அபாரமான சூழ்நிலை அறிதலைக் கொண்டது.
பந்தின் வேகம், உயரம், எல்லைக்கோட்டின் தூரம், காலைப் பதிக்காது சரியான முறையில் ஜம்ப் செய்தது என அனைத்தையும் கணக்கிட்டார்.
காற்றில் இருந்தவாறே பந்தைப் பிடித்து, தரையில் இறங்கும்முன் அருகில் உள்ள வீரரிடம் வீசினார். இவையனைத்தையும் நொடிப்பொழுதில் செய்ய, அளப்பரிய விழிப்புணர்வு, துல்லியம், உடல் வலிமை, மன அமைதி தேவை.
அய்யர் அனைத்தையும் கச்சிதமாகச் செய்தார். நான் நேரில் கண்ட தலைசிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்று என பதிவிட்டுள்ளார்.