கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார். இந்த சீசனில் எல்.எஸ்.ஜி. அணி அவரை ஏலத்தில் எடுத்தது. முதல் 13 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பேட்டிங்கள் ஆட்டமிழக்காமல் 5 ரன்கள் அடிக்க, 1 விக்கெட்டும் கைப்பற்றினார்.
தனது மகன் கடைசி போட்டியில் இடம் பிடித்திருந்த நிலையில், சச்சின் தெண்டுல்கர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மிகச் சிறப்பாகச் செய்தாய், அர்ஜுன். இந்த சீசன் முழுவதும் நீ நடந்து கொண்ட விதம் குறித்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். உன் திறமையின் மீது எப்போதும் நம்பிக்கை வைத்து, பொறுமையைக் கடைப்பிடித்து, அமைதியாகக் கடினமாக உழைத்து, கடைசிப் போட்டி வரை உனக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தபோதிலும் நேர்மறையான மனநிலையுடனேயே நீ திகழ்ந்தாய்.
கிரிக்கெட் விளையாட்டானது திறமையை எத்துணைக்குச் சோதிக்கிறதோ, அதே அளவுக்குப் பொறுமையையும் சோதிக்கிறது. இவ்விரண்டையும் இன்று நீ மிக அழகாகக் கையாண்டாய்.
எப்போதும் பணிவுடனும், இந்த விளையாட்டின் மீது நீ என்றும் கொண்டிருந்த அதே ஆர்வத்துடன் தொடர்ந்து பயணிப்பாயாக.
உன் மீது என்றும் மாறாத அன்பு உண்டு.
இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் எல்.எஸ்.ஜி. தோல்வியை தழுவியது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தது.