ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது.
பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் சேஸிங் செய்ய தொடங்கியது. ரியான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் பந்தை நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் ஓவரை முசாரபானி வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா, ரிக்கெல்டன் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். 2-வது ஓவரை வைபவ் அரோரா வீசிசனார். இந்த ஓவரில் ரிக்கெல்டன் 2 சிக்சர்கள் பறக்கவிட்டார். 3-வது ஓவரை முசாரபானி வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ரிக்கெல்டன் தலா ஒரு சிக்ஸ் அடித்தனர்.
வருண் சக்கரவர்த்தி வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் 4.1 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். 4-வது பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விரட்டினார். 6-வது ஓவரை கார்த்திக் தியாகி வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் விளாசினார். கடைசி பந்தில் 2 ரன் எடுத்து 23 பந்தில் அரைசதம் விளாசினார். அவரது அரை சதத்தில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும்.