19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 34-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஐதராபாத் (6 விக்கெட்), சென்னை (43 ரன்), மும்பை (18 ரன் ), லக்னோ (5 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தியது. ராஜஸ்தான் (6 விக்கெட்), டெல்லி (6 விக்கெட்) ஆகியவற்றிடம் தோல்வியை தழுவியது. பெங்களூரு அணி சொந்த மண்ணில் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது.
பேட்டிங்கில் விராட் கோலி (247 ரன்), கேப்டன் ரஜத் படிதார் (230), பில் சால்ட் (202 ), டிம் டேவிட் (173) தேவ்தத் படிக்கல் (153) ஆகியோரும், பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் (10 விக்கெட்), குணால் பாண்ட்யா (8) ஜேக்கப் டபி (6) ஹேசில்வுட், ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் 3 வெற்றி 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி டெல்லி (1 ரன்), லக்னோ (7 விக்கெட்), கொல்கத்தா (5 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தியது. பஞ்சாப் (3 விக்கெட்), ராஜஸ்தான் (6 ரன்), மும்பை (99 ரன்) அணிகளிடம் தோற்றது.
பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் (265 ரன்), பட்லர் (206) ஆகியோரும், பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (12 விக்கெட்), ரபடா ( 10 ), முகமது சிராஜ், ரஷித் கான், அசோக் சர்மா (தலா 6 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 7-வது போட்டியாகும். இதுவரை நடந்த 6 ஆட்டத்தில் தலா 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.