ஐபிஎல் 2026 சீசனின் தொடக்கக் கட்டத்திலேயே ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரு நட்சத்திர வீரர்களும் தங்கள் முன்னாள் அணிகள் மீதான பாசத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சுமார் 13 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக விளங்கிய ரவீந்திர ஜடேஜா, இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார்.
இதனால் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில், ஜடேஜா தனது முன்னாள் அணியின் 2 முக்கிய விக்கெட்டுகளை (சிவம் துபே, சர்பராஸ்கான்) வீழ்த்தி ராஜஸ்தானின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
போட்டி முடிந்த பிறகு, சிஎஸ்கே வீரர் கலீல் அகமதுவை சந்தித்த ஜடேஜா, அவரது ஜெர்சியில் இருந்த சிஎஸ்கே லோகோவை முத்தமிட்டார். இந்தச் செயல் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல 2016 முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்ந்த ரிஷப் பண்ட், கடந்த சீசனில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் லக்னோவில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் பண்ட் தனது முன்னாள் அணி வீரர்களைச் சந்தித்தார். அப்போது டெல்லி அணியின் லோகோவிற்கு ஜடேஜா போல முத்தமிட்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போட்டிக்கு முன்னதாக, டெல்லி பிரீமியர் லீக்கில் மோதிக் கொண்ட நிதிஷ் ராணா மற்றும் திக்வேஷ் ரதி ஆகியோரைச் சமாதானம் செய்து வைப்பதில் பண்ட் முக்கியப் பங்காற்றினார். இவர்களுடன் டெல்லி அணியின் குல்தீப் யாதவும் இணைந்திருந்தது பழைய நினைவுகளை மீட்டெடுத்தது.