பழனி தொகுதி 
ஐ.பி.எல்.

பழனி தொகுதி கண்ணோட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி முருகனின் 3-ம் படைவீடு, மலைகளின் இளவரசி கொடைக்கானல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும்.

சொத்து மதிப்பு

கே. ரவி மனோகரன்

1. கையிருப்பு- ரூ. 5,17,063

2. அசையும் சொத்து- ரூ. 1,93,54,595

3. அசையா சொத்து- ரூ. 17,37,50,000

ஐ.பி. செந்தில்குமார்

1. கையிருப்பு- ரூ. 8,60,000

2. அசையும் சொத்து- ரூ. 1,02,54,131

3. அசையா சொத்து- ரூ. 2,95,29,390

இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வை சேர்ந்த செந்தில்குமார் உள்ளார். பழனி, கொடைக்கானல் நகராட்சி, பழனி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியங்கள், ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாலசமுத்திரம், பண்ணைக்காடு ஆகிய பேரூராட்சிகள் இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

ஆதிதிராவிடர், கவுண்டர், பிள்ளைமார் சமூகத்தினர் தலா 10 சதவீதமும், இஸ்லாமியர்கள் 10 சதவீதமும் இதர சமூகத்தினர் 20 சதவீத மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

இத்தொகுதியில் 1,35,992 ஆண் வாக்காளர்களும், 1,41,755 பெண் வாக்காளர்களும் 36 பேர் 3-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,77,783 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிமுக சார்பில் கே. ரவி மனோகரனும், திமுக சார்பில் ஐ.பி. செந்தில்குமாரும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூவேந்தனும், நாம் தமிழர் கட்சி சார்பில் வினோத் ராஜசேகரனும், அமமுக சார்பில் வீரகுமாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் வெற்றி

1957 லட்சுமிபதிராஜூ (காங்கிரஸ்)

1962 வெங்கிடசாமி (சுயேட்சை)

1967 கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.)

1971 பழனிச்சாமி (தி.மு.க.)

1977 பழனிவேல் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)

1980 பழனிவேல் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)

1984 பொன்னம்மாள் (காங்கிரஸ்)

1979 பழனிவேல் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு)

1991 சுப்புரத்தினம்(அ.தி.மு.க.)

1996 பூவேந்தன் (தி.மு.க.)

2001 சின்னச்சாமி (அ.தி.மு.க.)

2006 அன்பழகன் (தி.மு.க.)

2011 வேணுகோபாலு (அ.தி.மு.க.)

2016 செந்தில்குமார் (தி.மு.க.)

இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம். ஆயக்குடி பகுதியில் விளையும் கொய்யாப்பழம் பிரசித்தி பெற்றது. ஆனால் இதனை வெளியூர்களுக்கு அனுப்ப போதிய வியாபார சந்தை இல்லை என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இது தவிர கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, பீன்ஸ், முள்ளங்கி, கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது. மேலும் கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் சமீப காலமாக கொய்மலர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை நம்பி இருந்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். புவிசார் குறியீடு பெற்ற பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு ஆகியவை இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

ஆனால் கொடைக்கானல் மலைப்பூண்டு விற்பனையை அதிகரிக்க போதிய வழிகாட்டுதல் இல்லாமல் அதனை பயிரிட்டுள்ள விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். வெளிநாட்டு பூண்டு வருகை காரணமாக மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டுக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே தெரிவிக்கின்றனர்.

ரவி  மனோகர்- செந்தில் குமார்

வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்லும் இப்பகுதியில் அதனை மேம்படுத்தும் வகையிலான எந்தவித நடவடிக்கையும் இல்லை. குறிப்பாக கொடைக்கானல் பஸ் நிலையம் மல்டி லெவல் பார்க்கிங் நிலையமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு இன்னும் செயல்படுத் தப்படவில்லை.

இதனால் சீசன் சமயங்களில் கொடைக்கானல் வரும் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்கி வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். இதே போல மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள், சாலை வசதி நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் சுதந்திரமடைந்து இன்று வரை பல கிராமங்கள் மின்சார வசதியின்றி இருப்பதாகவும் இத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பழனியில் வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் அளவுக்கு மிகப்பெரிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.