ஐ.பி.எல்.

சென்னையில் இனி ஐபிஎல் போட்டிகள் இல்லையா? வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக டெல்லியில் ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #IPL

மாலை மலர்

புதுடெல்லி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியானது கடும் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.

தமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர். இந்நிலையில், சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எல் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கேற்ப நாளை நடக்க இருந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. #IPL #TamilNews