புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது. லக்னோவை 141 ரன்னில் மடக்கிய டெல்லி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. அந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், பதும் நிசாங்கா. நிதிஷ் ராணா, கேப்டன் அக்ஷர் பட்டேல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், இம்பேக்ட் வீரர் சமீர் ரிஸ்வி (70 ரன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (39 ரன்) நிலைத்து நின்று வெற்றிக்கு வித்திட்டனர். பந்து வீச்சில் லுங்கி இங்கிடி, டி.நடராஜன், குல் தீப் யாதவ் கலக்கினர்.
5 முறை சாம்பியனான மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை பதம் பார்த்து 13 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரையான் ரிக்கெல்டன் (81 ரன்), ரோகித் சர்மா (78 ரன்) அரைசதம் அடித்தனர். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.
நியூசிலாந்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் அணியினருடன் தற்போது இணைந்து உள்ளார். அவரது வருகை மும்பை அணியின் பந்து வீச்சை பலப்படுத்தும். மொத்தத்தில் வெற்றி உத்வேகத்தை தொடர இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன. அத்துடன் பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படலாம். அங்கு இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 37 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 21-ல் மும்பையும், 16-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
குஜராத் அணி முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், கிளென் பிலிப்ஸ், பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ககிசோ ரபடா, ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர் என சிறந்த வீரர்களுக்கு குறைவில்லை.
ராஜஸ்தான் அணி முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் 127 ரன்னில் சென்னையை சுருட்டிய ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் ரியான் பராக், ஹெட்மயரும், பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், நன்ரே பர்கர், ரவீந்திர ஜடேஜாவும் மிரட்டுகிறார்கள்.
தொடக்க ஆட்டத்தில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்து சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்துடன் குஜராத்தும், வெற்றியை நீட் டிக்கும் வேட்கையில் ராஜஸ்தானும் வரிந்து கட்டுவதால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது.