ஐ.பி.எல்.

IPL 2026 | சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்- டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம்

டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவது சந்தேகம் என சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

ஐபிஎல் தொடரின் 9-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. தோனி இல்லாதது முக்கிய காரணம் என ரசிகர்கள் கொத்தளித்து வந்தனர்.

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி விளையாடுவார் என நேற்று தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.

அந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவது சந்தேகம் என சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 22-ம் தேதி பயிற்சியின் போது தோனிக்கு ஏற்பட்ட கால் தசைப்பிடிப்பு இன்னும் முழுமையாக குணமடையவில்லை. தற்போது அவர் சென்னையில் தங்கி தீவிர உடற்பயிற்சி மற்றும் மறுவாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் இன்னும் முழுமையான உடல் தகுதியை எட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து சிஎஸ்கே தரப்பில் கூறுகையில், "தோனியின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர் அவசரமாகக் களமிறக்கப்படுவதை விட, முழுமையாகக் குணமடைவதையே அணி நிர்வாகம் விரும்புகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு மிகக்குறைவு என்றே தெரிகிறது.

டெல்லிக்கு எதிரான போட்டியைத் தொடர்ந்து, ஏப்ரல் 14-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் தோல்விகளால் தவித்து வரும் சிஎஸ்கே அணிக்கு, தோனியின் அனுபவம் மற்றும் ஃபினிஷிங் திறன் இல்லாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.