ஐபிஎல் 2026 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி நாளை டெல்லி அணியுடன் மோதவுள்ளது.
இந்நிலையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நட்சத்திர ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் அணியுடன் இணைந்துள்ளார்.
முதல் போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும், சுழற்பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்ஃபர் சற்று ரன்களை வாரி வழங்கினார். தற்போது சான்ட்னர் வருகை தந்துள்ளதால், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் அவர் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு, சான்ட்னர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கு தனிப்பட்ட விடுப்பு கோரியிருந்தார். இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மும்பையின் முதல் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. சான்ட்னருடன் விடுப்பு கோரியிருந்த இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் இன்னும் அணியுடன் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.