ஐ.பி.எல்.

IPL 2026: ரிக்கல்டன், ரோகித் சர்மா அபாரம்: கொல்கத்தாவை நொறுக்கியது மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணியில் ரியான் ரிக்கல்டன், ரோகித் சர்மா அரை சதமடித்தனர்.

ஐ.பி.எல். தொடரின் 2வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. ரகானே 67 ரன்னும், ரகுவன்ஷி 51 ரன்னும் குவித்தனர்.ரிங்கு சிங் 33 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 78 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 16 ரன்னில் வெளியேறினார்.

சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் 43 பந்தில் 81 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார். திலக் வர்மா 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், மும்பை அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 13 ஆண்டு கால சோகத்துக்கு முடிவு கட்டியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.