திருமங்கலம் தொகுதி 
ஐ.பி.எல்.(IPL)

திருமங்கலம் தொகுதி கண்ணோட்டம்

திருமங்கலம் பார்மூலா என்ற பெயரில் பரபரப்பாக பேசப்பபடும் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் தொகுதி கண்ணோட்டம்.

மாலை மலர்

கப்பலூர்... தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய தொழிற்பேட்டை திருமங்கலம் தொகுதியில்தான் உள்ளது. இங்குள்ள தொழிற்பேட்டையில் கார் கம்பெனி, கார்மெண்ட்ஸ் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இதில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்த ஊர் என்ற பெருமையும் திருமங்கலத்துக்கு உண்டு. கடந்த 2009-ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் “திருமங்கலம் பார்மூலா” என்ற பெயரில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் - 2,68,939. இதில் ஆண் வாக்காளர்கள் -1,31,048. பெண் வாக்காளர்கள் 1,37,884. மூன்றாம் பாலினத்தவர்கள் - 7.

திருமங்கலம் தொகுதியை பொறுத்தவரை பிரதான தொழில் விவசாயம். கடந்த 20 வருட காலமாக நெல் விளைச்சல் குறைவு. ஆற்றுப்பாசனம் டேம் பாசனம் கிடைக்கும் வசதி குறைவு காரணம். நீர்வரத்து கால்வாய்கள் தூர் வாராமல் அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழைநீர் மற்றும் கிணற்று பாசனத்தை வைத்து விவசாயம் நடைபெறுகிறது.

திருமங்கலம் தொகுதியில் முக்குலத்தோர், தெலுங்கு பேசுவோர், ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திருமங்கலம் நகராட்சி, டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் யூனியன்கள், பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகள் இடம் பெற்றுள்ளன. திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் என தாலுகாக்கள் உள்ளன.

இந்த தொகுதியில் இதுவரை 15 பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளன. இதில் அ.தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ் 5 முறையும், ம.தி.மு.க., பார்வர்டு பிளாக் தலா ஒரு முறையும், தி.மு.க. 3 முறை (இடைத்தேர்தலை சேர்த்து) வெற்றி பெற்றுள்ளன.

கோரிக்கைகள்

மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க. செல்வாக்கு பெற்ற தொகுதிகளில் திருமங்கலமும் ஒன்று. தொகுதியை பொறுத்தவரை படித்த இளைஞர்கள் அதிகம் இருப்பதால் நிரந்தர பொருளாதாரத்தை மேம்படுத்த இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் முக்கிய சாலையில் உள்ள திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. பஸ்கள் நடுரோட்டில் நின்று செல்வதால் பயணிகள் மழைக்கும், வெயிலுக்கும் மிகுந்த சங்கடத்தை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த 45 வருடங்களாக இங்குள்ள மக்களின் பிரதான கோரிக்கை ரெயில்வே மேம்பாலம். இதுவரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் திருமங்கலம் வடபகுதி வளர்ச்சி அடையவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கப்பலூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் தகராறு ஏற்படுகிறது. இதனால் சிறு&குறு தொழில்கள் பாதிக்கப்படுகிறது. சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று பலமுறை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

திருமங்கலம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை. மதுரை மல்லி என்று பெயர் வருவதற்கு காரணம் இப் பகுதியில் இருந்து மல்லிகை அதிக அளவில் பயிரிட்டு விற்பனைக்கு செல்வதுதான். இந்த மல்லியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விமான சேவை, சென்ட் பேக்டரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகவே உள்ளது.

கள்ளிக்குடி தாலுகாவாக மாற்றப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் தற்போது தான் புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த பகுதியில் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட நவதானியங்கள் அதிக அளவில் பயிரிடப்படுவதால் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

தேர்தல் வெற்றி

1952- ராசாராம் (காங்கிரஸ்)

1957- பெரியவல குருவரெட்டி (சுயேட்சை)

1962- திருவேங்கட ரெட்டியார் (காங்கிரஸ்)

1967- என்.எஸ்.வி.சித்தன் (காங்கிரஸ்)

1971- ரத்தினசாமிதேவர் (பா.பிளாக்)

1977- சரஸ்வதி (அ.தி.மு.க.)

1980- என்.எஸ்.வி.சித்தன் (காங்கிரஸ்)

1984- என்.எஸ்.வி.சித்தன் (காங்கிரஸ்)

1989- சாமிநாதன் (தி.மு.க.)

1991- ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)

1996- முத்துராமலிங்கம் (தி.மு.க.)

2001- காளிமுத்து (அ.தி.மு.க.)

2006- வீரஇளவரசன் (ம.தி.மு.க.)

2009- லதா அதியமான் (இடைத்தேர்தல்) (தி.மு.க.)

2011- முத்துராமலிங்கம் (அ.தி.மு.க.)

2016- ஆர்.பி.உதயகுமார் (அ.தி.மு.க.)