லால்குடி தொகுதி 
ஐ.பி.எல்.

ஹாட்ரிக் வெற்றி கண்ட திமுக வேட்பாளரை எதிர்கொள்ளும் தமாகா: லால்குடி தொகுதி கண்ணோட்டம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளை ஒப்பிடும்போது குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி லால்குடி தொகுதியாகும்.

லால்குடி தொகுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் தி.மு.க. 9 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 526 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரும்பாலும் நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் வசிக்கும் பகுதியாக இந்த தொகுதி அமைந்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இந்த பகுதியில் அமைந்துள்ளன.

குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், டால்மியா சிமென்ட் தொழிற்சாலை, புகழ்பெற்ற லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில், கோத்தாரி சர்க்கரை ஆலை, அன்பில் மாரியம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், குமுளூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவை இந்த தொகுதியில் உள்ள முக்கியமான இடமாகும்.

லால்குடி, புள்ளம்பாடி ஆகிய இரு ஊராட்சி ஒன்றி யப் பகுதிகளையும், லால்குடி, புள்ளம்பாடி, பூவாளூர், கல்லக்குடி ஆகிய பேரூராட்சி பகுதிகளையும் கொண்ட தொகுதியாகும்.

திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை இந்த தொகுதியின் வழியாகத்தான் செல்கிறது. ஆனால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கித் தவிப்பது இந்த சாலையை பயன்படுத்துபவர்களால் மறக்க முடியாத அனுபவமாகவே இருக்கும்.

லால்குடி நகரின் மையப் பகுதியில் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கி கடந்த ஆண்டுதான் நிறைவடைந்தது. ஆனாலும் முழுமையான பயன்பாட்டுக்கு தேவையான அணுகுசாலை, ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பணிகளின் காரணங்களால் பாலம் கட்டி முடிக்கப்பட்டும் தற்போது வரை பயனற்ற நிலையிலேயே இருந்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் விஜயமூர்த்தியும், தி.மு.க. சார்பில் சவுந்திரபாண்டியனும் போட்டியிட்டனர். இதில் சவுந்திரபாண்டியன் அ.தி.மு.க வேட்பாளரை விட 3 ஆயிரத்து 837 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சி சார்பில் தர்மராஜ் போடியிடுகிறார். திமுக சார்பில் மூன்று முறை வெற்றி பெற்ற சவுந்திரபாண்டியன் மீண்டும் களம் காண்கிறார்.

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

1951 ராஜா சிதம்பரம் (சுயேட்சை)

1957 லாசர் (காங்கிரஸ்)

1962 தர்மலிங்கம் (தி.மு.க.)

1967 நடராஜன் (தி.மு.க.)

1971 - முத்தமிழ்செல்வன் (தி.மு.க.)

1977 கே.என்.சண்முகம் (அ.தி.மு.க.)

1980 அன்பில் தர்மலிங்கம் (தி.மு.க.)

1984 வெங்கடாசலம் (காங்கிரஸ்) 

1989- கே.என். நேரு (தி.மு.க.)

1991- லோகாம்பாள் (காங்கிரஸ்)

1996- கே.என்.நேரு (தி.மு.க.)

2001- பாலன் (அ.தி.மு.க.)

2006- சவுந்திரபாண்டியன் (தி.மு.க.)

2011- சவுந்திரபாண்டியன் (தி.மு.க.)

2016- சவுந்திரபாண்டியன் (தி.மு.க.)