குமரி மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று கிள்ளியூர். குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைய போராட்டம் நடத்திய மூத்த தலைவர்கள் நேசமணி, பொன்னப்ப நாடார் ஆகியோரை வெற்றி பெறவைத்த தொகுதி.
இத்தொகுதிக்குட்பட்ட புதுக்கடையில்தான் மொழிப்போர் தியாகிகளின் நினைவு ஸ்தூபியும் அமைந்துள்ளது. நீண்ட கடற்கரை கிராமங்களும் இத்தொகுதிக்குள் வருகிறது.
இங்கு பிரசித்தி பெற்ற இந்து கோவில்கள் உள்ளன. குறிப்பாக 12 சிவாலயங்களில் முதல் சிவாலயமான முன்சிறை மகாதேவர் கோவில் இத்தொகுதிக்குள்தான் வருகிறது. அதோடு பிரசித்தி பெற்ற பல கிறிஸ்தவ ஆலயங்களும் இங்குள்ளன. அதோடு புகழ்பெற்ற பள்ளி வாசல்களும் இத்தொகுதிக்குள் உள்ளது.
கிள்ளியூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 379 ஆண்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 372 பெண்களும் உள்ளனர். இவர்களோடு 3-ம் பாலினத்தவர் 19 பேர் உள்ளனர்.
இத்தொகுதிக்குள் இனயம் புத்தன்துறை, கொல்லஞ்சி, மத்திகோடு உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. 16 ஊராட்சிகள், 7 டவுண் பஞ்சாயத்துகளும் இடம் பெற்றுள்ளது.
இத்தொகுதிக்குள் இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் சமூகத்தினரே அதிக அளவில் வசிக்கிறார்கள். இவர்கள் சுமார் 78 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களை தவிர மீனவர்கள், ஆசாரிமார், நாயர் மற்றும் பிற சாதியினரும் உள்ளனர்.
நாடு விடுதலை அடைந்த பிறகு இத்தொகுதிக்கு 16 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியே 9 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு அடுத்து ஜனதா கட்சி 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும், ஜனதா தளம் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சுயேச்சையாக நின்ற விஜயராகவன் வெற்றி பெற்றார்.
கோரிக்கைகள்
கிள்ளியூர் தொகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையை பிரதானமாக கூறுகிறார்கள். நிலத்தடி நீர் உப்பாக மாறுவதால் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இதற்காக பராக்காணி பகுதியில் தடுப்பணை கட்டவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. தற்போதுதான் அங்கு தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது.
இத்தொகுதிக்குள்தான் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இதன் முகத்துவாரத்தில் அடிக்கடி கடல் மணல் குவிந்துவிடுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது அலைகளின் சீற்றத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணலை அகற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கை.
காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏ.-யுமான ராஜேஷ்குமார்
இதுபோல தொகுதி முழுக்க உள்ள சாலைகள் பலவும் மோசமாக இருப்ப தாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பழுதான சாலைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனை தடுக்க சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கால்வாய்களை தூர்வார வேண்டும், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுவரை வெற்றி விவரம்:
1952- பொன்னப்ப நாடார் (தமிழ்நாடு காங்கிரஸ்)
1954- பொன்னப்ப நாடார் (தமிழ்நாடு காங்கிரஸ்)
1957- நேசமணி (காங்கிரஸ்)
1962- பொன்னப்ப நாடார் (தமிழ்நாடு காங்கிரஸ்)
1967- வில்லியம் (காங்கிரஸ்)
1971- டென்னிஸ் (காங்கிரஸ்)
1977- விஜயராகவன் (ஜனதா கட்சி)
1980- விஜயராகவன் (ஜனதா கட்சி)
1984- குமாரதாஸ் (ஜனதா கட்சி)
1989- விஜயராகவன் (சுயேச்சை)
1991- குமாரதாஸ் (ஜனதா தளம்)
1996- குமாரதாஸ் (த.மா.கா.)
2001- குமாரதாஸ் (த.மா.கா.)
2006- ஜாண் ஜேக்கப் (காங்கிரஸ்)
2011- ஜாண் ஜேக்கப் (காங்கிரஸ்)
2016- ராஜேஷ் குமார் (காங்கிரஸ்)