கவுண்டம்பாளையம் தொகுதி 
ஐ.பி.எல்.

கவுண்டம்பாளையம் தொகுதி கண்ணோட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளிலேயே மிகப்பெரிய தொகுதியாக உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்.

மாலை மலர்

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் என்ற நகர் பகுதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த தொகுதி.

தொகுதியில் 2,29,997 ஆண்கள், 2,30,908 பெண்கள், 95 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4,61,000 வாக்காளர்கள் உள்ளனர்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் மாநகராட்சியின் 22 வார்டுகளும், வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹாரசாமக்குளம், நாய்க்கன்பாளையம், தடாகம் (ஆர்.எப்), ஆனைக்கட்டி (வடக்கு), ஆனைக்கட்டி (தெற்கு), வீரபண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரநத்தம், கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளானைப்பட்டி போன்ற கிராமங்களும்,

பெரியநாய்க்கன்பாளையம், நரசிம்ம நாய்க்கன்பாளையம், இடிகரை, கோவில்பாளையம் போன்ற பேரூராட்சிகளும் உள்ளன. இதுதவிர மாநகராட்சி பகுதிகளில் விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணர், துடியலூர், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளும் உள்ளன. இதுதவிர மேற்கு தொடர்ச்சியை யொட்டி ஏராளமான மலைக் கிராமங்களும் உள்ளன.

இந்த தொகுதியில் அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமலை கோவில் உள்பட பிரசித்த பெற்ற கோவில்களும் உள்ளன. இதுதவிர மசூதிகளும், சர்ச்சுகளும் உள்ளன. மத்திய போலீஸ் பயிற்சி பள்ளியும்(சி.ஆர்.பி.எப்) இந்த தொகுதியின் குருடம்பாளையத்தில்தான் உள்ளது. இதுதவிர இந்த தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டியில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இங்கு மட்டுமே 1000-த்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல மையம், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பாதி பகுதி, ராமகிருஷ்ணா மிஷன் போன்ற கல்லூரி பல்கலைக்கழகங்களும் இங்கு உள்ளன.

இங்கு வேளாளக் கவுண்டர்கள், ஒக்கலிக கவுடர்கள் அதிகளவிலும், அதற்கு அடுத்தபடியாக அருந்ததிய, பழங்குடியின மக்களும் வாக்கு வங்கியை தீர்மானிப்பவர்களாக உள்ளனர்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இங்கிருந்து செங்கல் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுதவிர மோட்டார் பம்ப், பவுண்டரிகள், உருக்காலைகள் என அதிகளவில் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

இந்த தொழில்களுக்கு அடுத்தபடியாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் உள்ளது. பலர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

பிரச்சினைகள்

இந்த தொகுதியில் கோவை மாவட்டம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்த தொகுதிகுட்பட்ட தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல் சூளைகளால் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மணல் கொள்ளை, வன விலங்குகள் ஊடுருவல் ஆகியவையும், பெரிய தொழிற்சாலைகள் இல்லாததும், மாநகராட்சியில் இணைந்த புதிய பகுதி என்பதால் வளர்ச்சிப் பணிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன.

எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் கொண்டைக்கடலை, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பயிர்களை பாதுகாப்பதற்கு தானியக் கிடங்குகள் அமைத்து தர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் குடிநீர் சேவைக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோவை வடமேற்குப் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடி மக்கள் இத்தொகுதியின் நிரந்தர வாக்காளர்கள். எனவே அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கடமையும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருக்கு இருக்கிறது.

மலைவாழ் மக்கள் குழந்தைகள் படிக்கும் உண்டு உறைவிட பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு பிளஸ்-2 வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே பிளஸ்-2 வகுப்புகளை விரைவில் தொடங்க வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

காட்டுயானைகள் அதிகம் உள்ளதாலும், வனப்பகுதியையொட்டி குடியிருப்புகள் பெருகி வருவதாலும் வனவிலங்கு, மனித மோதல்களில் அதிக உயிரிழப்பு ஏற்படும் தொகுதியாக இதுவிளங்கி வருகிறது. எனவே சூரியமின்வேலி, கழிதோண்டுவது உள்ளிட்டவற்றை முழுமையாக செயல்படுத்துவது அவசியம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் நொய்யல் நதிக்கும், பவானியாற்றுக்கும் இடையே உருவாகி திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலில் கலக்கும் கவுசிகா நதி இந்த தொகுதியில்தான் உள்ளது. இயற்கை நீராதாரமான இந்த நதி பல்வேறு காரணங்களால் முற்றிலுமாக அழிவைச் சந்தித்துள்ளது. இந்நதியை மீட்டெடுத்து, அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க வேண்டுமென்பது இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல்தான் இந்த தொகுதியில் தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 2 முறை மட்டுமே இந்த தொகுதி தேர்தலை சந்தித்துள்ளது. 2 முறையுமே அ.தி.மு.கவை சார்ந்த வி.சி.ஆறுக்குட்டி வெற்றி பெற்றுள்ளார்.