சொத்து மதிப்பு
1. தளவாய் சுந்தரம்
கையிருப்பு: ரூ. 50 ஆயிரம்
அசையும் சொத்து: ரூ. 1,15,70,097
இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையில் அமைந்துள்ள தொகுதி கன்னியாகுமரி. இந்திய பெருங்கடல், வங்க கடல் மற்றும் அரபி கடல் என முக்கடல் சங்கமிக்கும் பகுதியாகும். இங்கு கடலின் நடுவே அலையும் துறவி என இளைஞர்களால் புகழப்படும் விவேகானந்தரின் நினைவு மண்டபம் உள்ளது.
அதன் அருகே உலக பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவனுக்கு 133 அடி உயர பிரமாண்ட சிலையும் இன்னொரு பாறையில் அமைந்துள்ளது.
இவற்றை பார்க்கவே உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். சர்வதேச சுற்றுலா தலம் என்ற பெயர் பெற்ற கன்னியாகுமரி தொகுதியில் புகழ் பெற்ற பகவதி அம்மன் கோவில், ராஜராஜ சோழன் காலத்திய குகநாதீஸ்வரர் கோவில்கள் உள்ளது. இதுபோல கிறிஸ்தவர்கள் அதிகம் வந்து செல்லும் அலங்கார உபகார மாதா திருத்தலமும் உள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க கன்னியாகுமரி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 982 பேர். பெண்கள் 1 லட்சத்து 47 ஆயிரத்து 347 பேர். 3-ம் பாலினத்தவர் 104 பேர் உள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதிக்குள் அஞ்சுகிராமம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், சாமிதோப்பு போன்றவை பெரிய ஊர்களாகும். இவற்றுடன் ஏராளமான சிறிய மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. இத்தொகுதியில் 34 ஊராட்சிகள், 16 பேரூராட்சிகள், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 வார்டுகள் அடங்கி உள்ளன.
தொகுதிக்குள் நாடார், வெள்ளாளர், சாம்பவர், மீனவர் இன மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். இவர்களில் இந்து நாடார் 22.74 சதவீதமும், கிறிஸ்தவ நாடார் 21.16 சதவீதமும் உள்ளனர். இவர்களை தவிர இன்னும் பல சமூக மக்கள் இங்கு கணிசமாக வசிக்கிறார்கள்.
கிறிஸ்தவ சாம்பவர் 14.26 சதவீதமும், இந்து சாம்பவர் 2.64 சதவீதமும், இந்து வெள்ளாளர் 17.25 சதவீதமும், கிறிஸ்தவ வெள்ளாளர் 0.70 சதவீதமும், மீனவர்கள் 10.73 சதவீதமும் உள்ளனர். வேட்பாளரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக இவர்கள் உள்ளனர்.
நாடு விடுதலை அடைந்த பிறகு கன்னியாகுமரி தொகுதியில் 1952-ல் முதல் தேர்தல் நடந்தது. அதன்பின்பு 15 முறை இங்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக அ.தி.மு.க. 6 முறை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 4 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கன்னியாகுமரி தொகுதிக்குள் ஒரு புறம் நீண்ட கடற்கரையும், மறுபுறம் விவசாய நிலங்களும் உள்ளன. மீன்பிடி தொழில், விவசாயம், மலர் வணிகம், செங்கல் சூளை உள்ளிட்டவையே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.
கோரிக்கைகள்
விவசாய நிலங்கள் அனைத்தும் கடைமடை பகுதியாக உள்ளது. இதனால் கால்வாய்களை தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகும்.
இதுபோல கடற்கரைகளில் வசிக்கும் மீனவர்கள், கடலில் காணாமல் போகம் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கேட்டுவருகிறார்கள். அதோடு இத்தொகுதிக்குள் வரும் சின்னமுட்டம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களை விரிவு படுத்த வேண்டும், கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுதவிர ஏனைய மக்கள் கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்தி கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம் என்றாலும் ஊரக பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. கிராமபுறங்களிலும் சாலைகள் இன்னும் சீரமைக்கப்பட வில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இம்மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த தொழிற்சாலையும் இல்லை, எனவே இங்கு வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும், கன்னியாகுமரிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய விருப்பம் ஆகும்.
1952- ராமஸ்வாமி பிள்ளை-(இந்திய தேசிய காங்கிரஸ்)
1954- ராமஸ்வாமி பிள்ளை- (இந்திய தேசிய காங்கிரஸ்)
1957- ராமஸ்வாமி பிள்ளை (சுயேட்சை)
1962- நடராசன் (இந்திய தேசிய காங்கிரஸ்)
1967- பி.எம்.பிள்ளை- (இந்திய தேசிய காங்கிரஸ்)
1971- கே. ராஜா பிள்ளை (தி.மு.க.)
1977- கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
1980- முத்து கிருஷ்ணன் (அ.தி.மு.க.)
1984- பெருமாள் பிள்ளை (அ.தி.மு.க.)
1989- சுப்பிரமணிய பிள்ளை (தி.மு.க.)
1991- அம்மமுத்துபிள்ளை (அ.தி.மு.க.)
1996- சுரேஷ் ராஜன் (தி.மு.க.)
2001- தளவாய்சுந்தரம் (அ.தி.மு.க.)
2006- சுரேஷ் ராஜன் (தி.மு.க.)
2011- பச்சைமால் (அ.தி.மு.க.)
2016- ஆஸ்டின் (தி.மு.க.)