ஐ.பி.எல்.

IPL 2026 | ஆர்.சி.பி.க்கு 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், கிளாசன் அரைசதம் விளாச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 255 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல். 2026-ன் 67-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஆர்.சி.பி. அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்று ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் குறைந்தது 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்குள் வர முடியும். இதனால் அதிரடியா ரன்கள் குவிக்க வேண்டும் என்ற முனைப்பில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹெட் 16 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபிஷேக் சர்மா 22 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த இஷான் கிஷனும், கிளாசனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிளாசன் 24 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி வாணவேடிக்கை நிகழ்த்தினார். இஷான் கிஷன் 46 பந்தில் 79 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 12 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்துள்ளது.