ஐ.பி.எல். 2026 தொடரின் லீக் போட்டிகள் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று இரவு ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் ஆர்.சி.பி. கடைசி பந்தில் வெற்றிக்கான 2 ரன்களை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் ஆர்.சி.பி. 11 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அதேபோல் லக்னோ அணியும் 11 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
நேற்று லக்னோ அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. 5-வது இடத்தில் நீடிக்கிறது. சி.எஸ்.கே. 11 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் (6) ஆகிய இரண்டு அணிகளும் 6 வெற்றிகளை பெற்றுள்ளன. இதில் ஒரு போட்டி கைவிடப்பட்டதால் பஞ்சாப் அணிக்கு கூடுதலாக ஒரு புள்ளி உள்ளது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் 4-வது இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் 11 போட்டிகளில் தலா 7-ல் வெற்றி பெற்று 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.
ஆர்.சி.பி., சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். ஆர்சிபி சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. ஐதராபாத், பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் மாறான அந்த அணிகள் வெற்றி பெற்றால் அவர்களும் பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்வார்கள்.
சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் குறைந்த பட்சம் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்வார்கள். சிஎஸ்கே லக்னோ, சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.