இந்தியன் பிரிமியர் லீக் 19-வது தொடரின் முதல் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த தள்ளுமுள்ளு சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக, நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்க விழா கொண்டாடப்படவில்லை.
பெங்களூரு அணி கேப்டனாக ரஜத் படிதாரும், ஐதராபாத் அணி கேப்டனாக இஷான் கிஷணும் செயல்பட உள்ளனர்.
நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது. பந்துவீச்சில் அவ்வப்போது தொய்வு ஏற்படுவது அந்த அணியின் பலவீனம். பெங்களூரு அணியில் அதிரடி வீரர்களாக விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார் கலக்கி வருகின்றனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், ஜேகப் டபி முக்கிய பங்காற்றுவர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பொறுத்தவரை பவர்பிளே ஓவரில் அதிரடி ஆட்டத்தை காணமுடிகிறது. பந்துவீச்சும் பாராட்டும்படி உள்ளது. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் ஐதராபாத் வீரர்கள் திணறி வருகின்றனர்.
ஐதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் காயமடைந்து சிகிச்சையில் உள்ளதால் அவருக்கு மாற்றாக கேப்டனாக செயல்பட்டு வரும் இஷான் கிஷண், சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பல அதிரடிகளை அரங்கேற்றி காட்டினார். அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, டாப் ஆர்டரில் ரன்களைக் குவித்து வருகின்றனர். மிடில் ஆர்டரில் ஹென்றிச் கிளாசன், லியாம் லிவிங்ஸ்டோன் பவர் ஹிட்டர்களாக கை கொடுத்து வருகின்றனர். ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், சிவம் மாவி, ஷகிப் ஹுசேன், ஈஷான் மலிங்கா, சிவாங் குமார் போன்ற பந்துவீச்சாளர்களுடன் சிறந்த அணியாக ஐதராபாத் திகழ்கிறது.