நியூ சண்டிகார்:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் நியூசண்டிகாரில் இன்றிரவு நடக்கும் 4-வது லீக்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்சுடன் மோதுகிறது.
11 ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டில் இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த பஞ்சாப் அணி, 6 ரன் வித்தியாசத்தில் முதல்முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், அதிரடி வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன்சிங், ஷசாங் சிங், அஸ்மத் துல்லா ஒமர்ஜாய், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென் என முன்னணி வீரர்கள் அப்படியே தொடருகிறார்கள். உள்ளூர் சூழலில் ஆடுவது அவர்களுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும். வெற்றியோடு தொடங்க வேண்டும் என்ற வேட்கையுடன் தயாராக உள்ளனர்.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் எல்லா வகையிலும் பலமாக உள்ளது. கடந்த ஆண்டு 'பிளே-ஆப்' சுற்றுவரை முன்னேறிய அந்த அணியில் கடந்த சீசனில் ஆரஞ்சு நிற தொப்பி பெற்றவரான சாய் சுதர்சன் (759 ரன்), ஜோஸ் பட்லர், கிளென் பிலிப்ஸ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித்கான், ககிசோ ரபடா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ் தீப்சிங் என நட்சத்திர வீரர்களுக்கு குறைவில்லை.
சென்ற ஆண்டு பந்து வீச்சில் சொதப்பிய சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (15 ஆட்டத்தில் 9 விக்கெட்) அதற்கு பரிகாரம் தேடிக்கொள்ள முயற்சிப்பார். இவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியதில் தலா 3-ல் வெற்றி பெற்றுள்ளன.