ஐ.பி.எல்.

IPL 2026 GT vs RR | ஜெய்ஸ்வால், ஜுரெல் அரைசதம்: குஜராத்துக்கு 211 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜுரெல் 75 ரன்களும், ஜெய்ஸ்வால் 55 ரன்கள் சேர்த்தனர்.

ஐ.பி.எல். 2026 சீசனில் 9-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரஷித் கான் கேப்டனாக செயல்படுகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்பன் ரியான் பராக் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யவன்ஷி 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 32 பந்தில் அரைசதம விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 36 பந்தில் ஆறு பவுண்டரி, மூன்று சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த த்ருவ் ஜுரெல் சிறப்பாக விளையாடினார். மறுபக்கம் ரியான் பராக் 8 ரன்களிலும், ஹெட்மையர் 18 ரன்களிலும், பெராரியா 1 ரன்னிலும் வெளியேறினர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. ஜுரெல் 30 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார். 17 ஓவரில் 177 ரன்கள் குவித்தது. 18-வது ஓவரில் 13 ரன்களும், 19-வது ஓவரில் 11 ரன்களும் ராஜஸ்தான் அணிக்கு கிடைத்தன. இதனால் 19 ஓவரில் 201 ரன்கள் குவித்தது.

கடைசி ஓவரை முகமது சிராஜ் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜுரெல், 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் சிராஜ் 9 ரன்கள் விட்டுக்கொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்துள்ளது.