ஐ.பி.எல்.

IPL 2026 CSK vs PBKS | பஞ்சாப் கிங்ஸ்க்கு 210 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே

ஆயுஷ் மாத்ரே அரைசதம் அடிக்க, சர்பராஸ் கான் 12 பந்தில் 32 ரன்கள் விளாச, ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 45 ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் 2026 சீசனில் 7-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சிஎஸ்கே-வுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 5 ரன்கள் கிடைத்தன.

2-வது ஓவரை பார்ட்லெட் வீசினார். முதல் பந்தை கெய்க்வாட் பவுண்டரிக்கு விரட்டினார். 5-வது பந்தை சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார். முதல் போட்டியில் ராஜஸ்தான ராயல்ஸ் அணிக்கெதிராக 6 ரன்னில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். ஆயுஷ் மாத்ரே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 5-வது ஓவரில் ஒரு சிக்ஸ், 6-வது ஓவரில் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் சிஎஸ்கே பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்தது.

யான்சன் வீசிய 6-வது ஓவரில் 2 சிக்சர் விளாசினார். 8-வது ஓவரை சாஹல் சிறப்பாக வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 9-வது ஓவரை ஸ்டோய்னிஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி 29 பந்தில் அரைசதம் விளாசினார். அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் குவித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 9.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ருதுராஜ் கெய்க்வாட்- ஆயுஷ் மாத்ரே ஜோடி 11.1 ஓவரில் பிரிந்தது. 12-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். சிறப்பாக விளையாடி ஆயுஷ் மாத்ரே 43 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 73 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 12.3 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த கார்த்திக் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார் ஏமாற்றம் அடைந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே உடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். 15-வது ஓவர் அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் அவர் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். 16-வது ஓவரில் ஒரு சிக்ஸ் விளாசினார். 16 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.

17-வது ஓவரை வைஷாக் வீசினார். முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய சர்பராஸ் கான் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 12 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 32 ரன்கள் விளாசினார். அடுத்த வீர் களம் இறங்கினார். இவர் முதல்முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

18-வது ஓவரில் ஷிவம் துபே ஒரு சிக்ஸ் அடிக்க, வீர் பவுண்டரி ஒன்று விளாசினார். 18-வது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன. 18 ஓவர் முடிவில் சிஎஸ்கே 182 ரன்கள் அடித்திருந்தது.

19-வது ஓவரை பார்வெட் வீசினார். இந்த ஓவரில் ஷிவம் துபே இரண்டு பவுண்டரிகள் அடித்தார். 19 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 195 ரன்கள் அடித்திருந்தது.

கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் ஷிவம் துபே 3 பவுண்டரி அடிக்க 14 ரன்கள் கிடைத்தன. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. ஷிவம் துபே 27 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.