துறைமுகம் தொகுதி 
ஐ.பி.எல்.

திமுக-வின் கோட்டையாக விளங்கும் துறைமுகம் தொகுதி கண்ணோட்டம்

சென்னையில் வி.ஐ.பி. தொகுதியாக துறைமுகம் விளங்குகிறது. முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதியாகும். தமிழ்நாட்டிலேயே சிறிய தொகுதி என்ற சிறப்பும் இதற்கு உள்ளது.

மாலை மலர்

தி.மு.க. வேட்பாளர் பி.கே. சேகர்பாபு மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க. வேட்பாளர் வினோத் செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் சந்தானகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி கிச்சா ரமேஷ், நாம் தமிழர் கட்சி முகமது சுதாபி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் பி.கே. சேகர்பாபு சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 36,000

2. அசையும் சொத்து- ரூ. 56,90,191.43

3. அசையா சொத்து- ரூ. ஏதுமில்லை

திமுக வேட்பாளர் வினோத் செல்வன் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 1,10,000

2. அசையும் சொத்து- ரூ. 2,52,68,285.28

3. அசையா சொத்து- ரூ. 10,00,00,000

இந்த தொகுதியில் சென்னை துறைமுகம், பாரிமுனை, ஐகோர்ட், அரசு சட்டக்கல்லூரி, தலைமைச் செயலகம், சென்ட்ரல் ரெயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி போன்ற பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளன.

சென்னை மாநகராட்சி வார்டுகள் 54, 55, 56, 57, 59, 60 ஆகியவை இதில் அடங்கும். இந்த தொகுதியில், மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி 2 முறையும், மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் 3 முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதனால் ஆரம்பம் முதலே துறைமுகம் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. 1977, 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் தி.மு.க. வேட்பாளர் ஏ.செல்வராஜன் ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார். 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் கருணாநிதி தொடர் வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1996, 2001, 2006-ம் ஆண்டுகளில், க.அன்பழகன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து, துறைமுகம் தொகுதி தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஆனால், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிலைமை மாறியது. 34 ஆண்டுகால தி.மு.க.வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கிய பழ.கருப்பையா 20,317 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அல்தாப் உசேனை (தமிழ் மாநில தேசிய லீக்) தோற்கடித்தார்.

இந்த நிலையில் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் விழா ஒன்றில் பங்கேற்று பேசும்போது, அ.தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்தார். இதனால், அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. தலைமை அவரை கட்சியை விட்டு நீக்கியது. அவரும் மறுநாளே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, தேர்தலுக்கு 3 மாத இடைவெளியே இருந்ததால், அதுவரை காலியானதாகவே துறைமுகம் தொகுதி இருந்தது.

பிறகு, 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. சார்பில் பி.கே. சேகர்பாபுவும், அ.தி.மு.க. தரப்பில் கே.எஸ். சீனிவாசனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டனர். இதில் பி.கே. சேகர்பாபு வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை தவிர மற்ற 23 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

துறைமுகம் தொகுதியில் சிறுபான்மையின முஸ்லிம் மக்கள் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தங்கியிருக்கும் கூலித்தொழிலாளர்களும் அதிகம் பேர் இந்த தொகுதியில் உள்ளனர். மேலும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களும் கணிசமாக இருக்கின்றனர்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், மொத்த வாக்காளர்கள் 1,88,171. பதிவான வாக்குகள் 1,04,313, பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) 42,071, கே.எஸ்.சீனிவாசன் (அ.தி.மு.க). 37,235.

தொகுதியில் பூக்கடை, மண்ணடி, கொத்தவால் சாவடி போன்ற பகுதிகள் போக்குவரத்து மிகுந்ததாக காணப்படுகிறது. தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, தள்ளுவண்டி, மீன்பாடி வண்டி போன்றவை இங்கு அதிகம் காணப்படுகின்றன.

இதனால், பிரதான சாலைகளை தவிர்த்து ஏனைய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கின்றது. குப்பை கழிவுகளும் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் எதிரொலிக்கிறது. பாரிமுனையில் பிரபலமான பகுதியாக விளங்கும் பர்மா பஜாரில், 300 சிறிய கடைகள் உள்ளன.

துறைமுகம் தொகுதியில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது நிலக்கரி துகள். அதாவது, சென்னை துறைமுகத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் கொண்டுவரப்பட்டு நிலக்கரி இறக்கப்பட்டதால் காற்று மாசு ஏற்பட்டது. தற்போது, நிலக்கரி இறக்கப்படுவது எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இது ஒன்றுதான் அந்த தொகுதி மக்களுக்கு கிடைத்த பெரிய விமோச்சனம்.

மற்றபடி, பெரிய அளவிலான வளர்ச்சி தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் இந்த பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் குறைந்தள்ளது.

மக்கள் நெருக்கம், வாகன பெருக்கத்தின் காரணமாக ஏற்படும் நெரிசலுக்கு பார்க்கிங் வசதி இல்லாததே காரணமாகும். மல்டிலெவல் இரு சக்கர மற்றும் 4 சக்கர பார்க்கிங் வசதி அமைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர் கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில், 18 வயது பூர்த்தியான புதிய வாக் காளர்கள், இடம் பெயர்ந்து வந்த வர்கள் என வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வேண்டும்.

ஆனால், கடந்த தேர்தலில் இருந்த எண்ணிக்கையைவிட இந்த தொகுதியில் 6,548 வாக்காளர்கள் குறைந்திருக்கிறார்கள். போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள் நீக்கப்பட்டது இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்

1971 ஏ.எம்.முகைதீன் (சுயேட்சை)

1977 ஏ.செல்வராஜன் (தி.மு.க.)

1980 ஏ.செல்வராஜன் (தி.மு.க.)

1984 ஏ.செல்வராஜன் (தி.மு.க.)

1989 மு.கருணாநிதி (தி.மு.க.)

1991 மு.கருணாநிதி (தி.மு.க.)

1996 க.அன்பழகன் (தி.மு.க.)

2001 க.அன்பழகன் (தி.மு.க.)

2006 க.அன்பழகன் (தி.மு.க.)

2011 பழ.கருப்பையா (அ.தி.மு.க.)

2016 பி.கே.சேகர்பாபு (தி.மு.க.)