ஐ.பி.எல்.

ஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்?

கொல்கத்தா ஈடன் கார்டனில் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #KKRvKXIP

மாலை மலர்

கொல்கத்தா அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. அந்த அணியில் இடம் பிடித்துள்ள அந்த்ரே ரஸல் வழக்கமாக எப்போதாவது ஒரு போட்டியில் அதிரடியாக விளையாடுவார். ஆனால் இந்த தொடரில் களம் இறங்கும் போட்டிகளை வாய்ப்பாக பயன்படுத்தி வாணவேடிக்கை நடத்தி வருகிறார்.

சென்னை அணிக்கெதிராக கடந்த 10-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 36 பந்தில் 1 பவுண்டரி, 11 சிக்சருடன் 88 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் 202 ரன்னைத் தொட முக்கிய காரணமாக இருந்தார். அதன்பின் டெல்லிக்கு எதிராக கடந்த 16-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 12 பந்துகளில் 6 சிச்சருடன் 41 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் 200 ரன்னைத் தொட முக்கிய காரணமாக இருந்தார். அந்த்ரே ரஸல் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தற்போது அஸ்வின் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்து 3 வெற்றிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் களம் இறங்காத அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 15-ந்தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் களம் இறங்கினார். களம் இறங்கிய முதல் போட்டியிலேயே 22 பந்தில் அரைசதம் விளாசி, 33 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, 4 சிக்ஸ் அடங்கும்.

நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் 63 பந்தில் 1 பவுண்டரி, 11 சிக்சருடன் 104 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இரு போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

நாளை நடைபெறும் முதல் ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்டை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் அந்த்ரே ரஸல் - கிறிஸ் கெய்ல் என்ற இரண்டு வாணவேடிக்கைகள் எதிர்எதிர் முனையில் மோதுகின்றன. இரண்டு வாணவேடிக்கையில் எது ஜொலிக்கும் என்பது போட்டியின்போதுதான் தெரியும்.