ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 141 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலக்கை துரத்திய டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
போட்டி முடிந்தவுடன், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திற்குள் வந்து, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரிடம் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசிய காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகின.
சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின் போது, கோயங்கா மிகவும் கோபமாக சைகை காட்டிப் பேசியது கேமராக்களில் பதிவானது. உரிமையாளர் ஆவேசப்பட்டபோது, கேப்டன் ரிஷப் பண்ட் எவ்வித பதிலும் கூறாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தச் சம்பவம், 2024-ல் கே.எல். ராகுலை சஞ்சீவ் கோயங்கா பொதுவெளியில் கடிந்துகொண்ட நிகழ்வை ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளது. சமூக வலைதளங்களில் கோயங்காவின் இந்தச் செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
சர்ச்சை வெடித்த பிறகு, சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் தளத்தில், "தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் எனது கேப்டன் மற்றும் அணியின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அடுத்த போட்டியில் வலிமையாகத் திரும்புவோம்" எனப் பதிவிட்டு நிலைமையைச் சமாளிக்க முயன்றுள்ளார்.