ஐ.பி.எல்.

முதல் ஓவரில் 1 ரன் கொடுத்து 3 விக்கெட்: அதுவும் அறிமுக போட்டியில்,, ஐ.பி.எல். வரலாற்றில் சாதனைப் படைத்த ஐதராபாத் பவுலர் | IPL 2026

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் பிரபுல் ஹிங்கே அறிமுக போட்டியிலேயே ஐபிஎல் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 216 ரன்கள் குவித்தது. பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களில் ஆல்அவுட் ஆகி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், ரியான் பராக் போன்றோர் இருப்பதால் 217 ரன்களை எளிதாக சேஸிங் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் ஓவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் அறிமுக வீரரான பிரபுல் ஹிங்கே வீசினார்.

அறிமுக வீரர்தானே.., ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி பட்டைய கிளப்புவார்கள் என நினைக்கையில் சூர்யவன்ஷி (அவர் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட்), துரவ் ஜுரல் (2-வது பந்தில் டக்அவுட்), பிரிட்டோரியஸ் (2-வது பந்தில் டக்அவுட்) ஆகியோரை வீழ்த்தினார். இதன்மூலம் முதல் ஓவரில் 1 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் சாதனைப் படைத்துள்ளார். அதுவும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் ஓவரிலேயே அந்த சாதனையைப் படைத்துள்ளார்.

2-வது ஓவரை மற்றொரு அறிமுக வீரர் சகிப் ஹுசைன் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஜெய்ஸ்வால் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.