ஐ.பி.எல்.

IPL 2026 | டெல்லியுடன் நாளை மோதல்: முதல் வெற்றி பெறுமா குஜராத்?

டெல்லி அணி குஜராத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

19வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரின் 14- வது லீக் ஆட்டம் டெல்லியில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி குஜராத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் லக்னோவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் மும்பை இந்தியன்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. சமீர் ரிஸ்வி பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். லக்னோவுக்கு எதிராக 70 ரன்னும், மும்பைக்கு எதிராக 90 ரன்னும் எடுத்தார். டெல்லி அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி தான் மோதிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்சிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான் ராயல்சிடம் 6 ரன் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது. இரு ஆட்டங்களிலும் கடுமையாக போராடி இருந்தது. ராஜஸ்தான் உடனான போட்டியில் வெற்றியை நூலிழையில் கோட்டை விட்டனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியைப் பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால் ரஷீத் கான் கேப்டனாக பணியாற்றினார். நாளைய போட்டியிலும் சுப்மன் கில் ஆடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

இரு அணிகளும் மோதியுள்ள 7 ஆட்டங்களில் டெல்லி 3- ல், குஜராத் 4-ல் வெற்றி பெற்றுள்ளன.