சமீர் ரிஸ்வி 
ஐ.பி.எல்.

IPL 2026: தனி ஆளாக போராடிய சமீர் ரிஸ்வி: மும்பையை வீழ்த்தியது டெல்லி

டெல்லி அணியின் சமீர் ரிஸ்வி 51 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார்.

ஐ.பி.எல். தொடரின் 8வது லீக் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார். ரோகித் சர்மா 35 ரன்னும், நமன் தீர் 28 ரன்னும் எடுத்தனர்.

டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கத்தில் கே.எல்.ராகுல், நிதிஷ் ரானா விரைவில் அவுட்டாகினர்.

3வது விக்கெட்டுக்கு பதும் நிசங்காவுடன் சமிர் ரிஸ்வி இணைந்தார். இந்த ஜோடி 73 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 44 ரன்னில் அவுட்டானார்.

பொறுப்புடன் ஆடிய சமீர் ரிஸ்வி அதிரடியாக ஆடி 51 பந்தில் 7 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், டெல்லி அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.