ஐ.பி.எல்.

IPL 2026: உர்வில் அதிரடியில் லக்னோவை வீழ்த்தியது சிஎஸ்கே

முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இங்லிஷ் 17 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் 85 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஷாபாஸ் அகமது 43 ரன்கள் சேர்த்தார்.

சென்னை அணி சார்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டும், நூர் அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 204 ரன்களை இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் இறங்கினர். சஞ்சு சாம்சன் 14 பந்தில் 28 ரன்னும், ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர்.

ருத்ர தாண்டவமாடிய உர்வில் படேல் 23 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், சிஎஸ்கேஅணி 19.2 ஓவரில் 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.