ஐ.பி.எல்.

4 ஆண்டுகளில் ஒரே ஒரு தோல்வி: சிஎஸ்கே-க்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டியில் இன்று சென்னை- பஞ்சாப் அணிகள் மோதுகிறது.

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டியில் இன்று சென்னை- பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி, இன்று தனது சொந்த மண்ணில் பஞ்சாப் அணியின் ஆதிக்கத்தை உடைத்து வெற்றிப் பாதைக்குத் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தொடர்ந்து திணறி வருகிறது. குறிப்பாக 2022-ஆம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் மோதிய 7 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

2022 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில், பஞ்சாப் அணி சென்னைக்கு எதிராக ஒரு அசைக்க முடியாத பலத்துடன் விளங்கி வருகிறது. 2024-ஆம் ஆண்டு தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் மட்டும் சிஎஸ்கே 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் பஞ்சாப் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.

குறிப்பாக சிஎஸ்கே-வின் கோட்டையாகக் கருதப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் பஞ்சாப் அணியின் ஆதிக்கம் நீடிக்கிறது. 2023, 2024 மற்றும் 2025 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் பஞ்சாப் அணியே வென்றுள்ளது.

தற்போது வரை இவ்விரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 16 முறை வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.