ஐ.பி.எல்.

மிக மோசமான நாள்: ஆர்.சி.பி.க்கு எதிரான தோல்வி குறித்து அக்சர் படேல்

6வது வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 39வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், ஆர்சிபி அணிகள் மோதின.

முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16.3 ஓவரில் 75 ரன்னில் சுருண்டது. அபிஷேக் போரல் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார்.

ஆர்சிபி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும், ரஷிக் சலாம், சுயாஸ் சர்மா, குருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், 6-வது வெற்றியை பதிவு செய்தது. 12 புள்ளிகள் பெற்று ஆர்.சி.பி. தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், டெல்லி அணியின் மோசமான தோல்வி குறித்து கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:

உண்மையில் என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடந்து முடிந்ததைப் பற்றி சிந்திப்பதைவிட இனி நடக்க வேண்டியதை பற்றி யோசிக்கவேண்டும். உங் கள் மன நிலை எதிர்மறையாக இருந்தாலும் அல்லது நேர்மறையாக இருந்தாலும் களத்தில் விளையாடித்தான் ஆக வேண்டும்.

75 ரன்னில் சுருண்ட இந்த நாள் எங்களுக்கு மிகவும் மோசமாக அமைந்தது. சிறப்பாக ஆடுவதை நேர்மறையுடன் தொடர்ந்து செய்ய வேண்டும். பெங்களூரு அணியின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் ஆவார்கள்.

பேட்ஸ்மேன்கள் தங்களது பேட்டிங் நுணுக்கத்தை மேம்படுத்திக் கொள்ள தனிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கேப்டன் என்ற முறையில் நான் பல்வேறு விஷயங்களைக் கற்று வருகிறேன். இந்தப் பதவியில் பல பொறுப்புகள் உள்ளன. என்ன செய்ய முடியுமோ, கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் செய்யமுடியும்.

தோல்விக்கு பல சாக்குபோக்குகளைச் சொல்லலாம். யார் மீதாவது குறை கூறலாம். ஆனால் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என தெரிவித்தார்.