சொத்து மதிப்பு
மாஃபா பாண்டியராஜன்
1. கையிருப்பு- ரூ. 50 அயிரம்
2. அசையும் சொத்து- 2,86,99,716
3. அசையா சொத்து- ரூ. 4,85,10,400
ஆவடி தொகுதி 1976 வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அடங்கியிருந்தது. பின்னர் 1977-ல் பூந்தமல்லி தொகுதியாக அறிவிக்கப்பட்டு அதில் ஆவடி பகுதி அடங்கியிருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது.
தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 608. இதில் ஆண்கள் 2 லட்சத்து 18 ஆயிரத்து 811 பேர். பெண்கள் 2 லட்சத்து 21 ஆயிரத்து 699 பேர். 3-- ம் பாலினத்தினர் 98 பேர் உள்ளனர்.
ஆவடி, திருவேற்காடு நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி, நெமிலிச்சேரி, நடுக்குத்தகை, கணாகரச்சேரி ஊராட்சிகள் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இங்கு வன்னியர், முதலியார், நாயுடு, ஆதிதிராவிடர் மற்றும் பல சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இத்துடன் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் குறிப்பிட்ட அளவு இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் 25 சதவீதம் பேர், வன்னியர் 15 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது.
ஆவடி தொகுதி மத்திய அரசு தொழிற்சாலைகளின் கேந்திரமாக திகழ்கிறது. குறிப்பாக, ராணுவ தளவாடங்களான பீரங்கிகளை தயாரிக்கும் டாங்கி தொழிற்சாலை, ராணுவ வீரர்களுக்கான ஆடைகள் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் குளோத்திங் பேக்டரி, ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை அமைந்துள்ளன.
அதேபோல் ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியில் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் டாட்டா ஸ்டீல், டி.ஐ. சைக்கிள்ஸ், முருகப்பா குரூப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆவடி சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் காய்கறி கீரை வகைகள் அனைத்தும் நேரடியாக வாடிக்கையாளரை சென்றடையும். அத்துடன், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன.
கோரிக்கை
ஆவடித்தொகுதியை சுற்றி அய்யப்பாக்கம் ஏரி, பருத்திப்பட்டு ஏரி, திருநின்றவூர் ஏரி, கொரட்டூர் ஏரி, புழல் ஏரி ஆகிய நீர் நிலை ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும் தொகுதி மக்களுக்கு பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. குடிநீருக்காக தனியார் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து இருக்கும் நிலை தொடர்கிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும் தொகுதியில் உள்ள நீர் ஆதாரங்களில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது. அதை தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.
2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை இதுவரை சரியாக செயல்படுத்தி முடிக்கவில்லை. அதற்கு நல்ல தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. போட்டியாளர் அப்துல் ரஹீம் 1,10,102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு தேர்தலில் மா.பா.பாண்டியராஜன் அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 1,08,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆவடி தொகுதியில் இதுவரை 2 முறை தேர்தல் நடைபெற்று 2 தடவையுமே அ.தி.மு.க.தான் வென்றுள்ளது. இந்த தேர்தல் அ.தி.மு.க. சார்பில் மா.பா. பாண்டியராஜன் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் சா.மு. நாசர் களத்தில் உள்ளார்.
மொத்த வாக்காளர்கள் - 4,40,608
ஆண்கள்- 2,18,811
பெண்கள்- 2,21,699
மூன்றாம் பாலினம்- 98